தமிழ் நாளிதழ்கள் குறித்து இளஞ்செழியன் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பது வருத்தற்திற்குறியது – வழக்கறிஞர் கா. ஆறுமுகம்

K. Arumugam_suaramஇன்று மலேசியாவின் முக்கிய தமிழ் நாளேடுகளில்,  திரு. இளஞ்செழியன் தமிழ் நாளேடுகள் குறித்து வெளியிட்ட கருத்து குறித்த எதிர்வினைகள் வெளிவந்திருந்தன. அவரைக் கருத்துக் குருடர் என்றும் தமிழ்ப்பத்திரிகைகள் குறித்து கருத்துரைப்பதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெல்லாம் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்துரைக்கையில், தமிழ் நாளேடுகள் இந்நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்த வழக்கறிஞர் ஆறுமுகம், திரு. இளஞ்செழியன் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பது வருத்தற்திற்குறியது என்றார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இளஞ்செழியனோடு இணைந்து செயலாற்றிய அனுபவமுடைய திரு. ஆறுமுகம், தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளி சார்ந்து அவரின் தொடர் நகர்ச்சியையும் செயல்பாடுகளையும் நினைவுக் கூர்ந்தார்.

இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கென பதிவுப் பெற்ற ஓர் அறவாரியம் உருவாகுவதற்கு இளஞ்செழியன் மிக முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளார். அவரின் சீரிய முயற்சியினாலேயே இன்று இந்நாட்டில் பலரால் அறியப்பட்ட, டோங் ஜோங் போல தமிழ்ப்பள்ளிகளுக்கான அறவாரியமாக தமிழ் அறவாரியம் இன்று விளங்குகிறது என விளக்கினார். மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்காக இன்று செயல்படுத்தப்பட்டுவரும் பலதரப்பட்ட பள்ளிசார் செயல்திட்டங்கள் திரு. இளஞ்செழியன் முன்னெடுத்த செயல்திட்டங்கள்தான் என்பதையும் திரு. ஆறுமுகம் தெளிவுபடுத்தினார். இளம் அறிவியல் தேடுநர்கள், 21-நாள் ஆங்கில முகாம், ஆங்கில வளமைத் திட்டம், இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா, இளம் இயற்கை விரும்பிகள் திட்டம்  என பல திட்டங்கள் இளஞ்செழியனின் முயற்சியால் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பலனளித்திருக்கின்றன.

elanjeliyanஅதைத் தவிர, இந்நாட்டில் தமிழ்ப் பாலர்பள்ளிகளின் வளர்ச்சியில் இளஞ்செழியன் ஆற்றிய பங்கும் மிக முக்கியமானது என்கிறார் ஆறுமுகம். தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தமிழ்ப் பாலர்பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே வேளையில், தமிழ் கணினியியல் துறையிலும் மிக அமைதியாக இளஞ்செழியன் ஆற்றி வரும் பங்கும் பிரமிக்க வைக்கிறது என்கிறார் திரு. ஆறுமுகம். ஆங்கிலத்தில் இருப்பதைப் போலவே தமிழிலிலும் கணினி சொற்திருத்தி, இலக்கணத் திருத்திகளை இளஞ்செழியன் மேம்படுத்தியுள்ளார். இன்றைய நிலையில் அது பரவலான பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்ப்பள்ளிகள் திட்ட வரைவு குழுவிலும் முக்கிய பொறுப்பிலிருந்து திரு. இளஞ்செழியன் செயலாற்றுகிறார்.

ஒரு கணினியியல் வல்லுனராக, மொழிப் புலமை உடையவராக, தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வளர்ச்சிக்குச் சீரிய பணி செய்பராகவே இளஞ்செழியன் தொடர்ந்து எங்களோடு இணைந்து உடன்வருகிறார் என வழக்கறிஞர் ஆறுமுகம் தெளிவுபடுத்தினார்.

இளஞ்செழியன் கூறிய கருத்து தமிழ் நாளேடுகள் தொடர்ந்து ஆக்ககரமானதாக உருவாக வேண்டும் என்பதை நோக்கியதாக இருந்திருக்குமே தவிர அவர்களைத் தூற்றும் நோக்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை என வழக்கறிஞர் ஆறுமுகம் மேலும் தெரிவித்தார்.