ரம் தொழிற்சங்க உறுப்பினர்களின் வேலைநீக்கம் திரும்பப் பெறவேண்டும், எம்டியுசி

 

MTUC KTMB1வேலைநீக்கம் செய்யப்பட்ட மலாயா ரயில்வே தொழிலாளர் சங்க (ரம்) உறுப்பினர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று அதன் ஆதரவை அறிவித்தது.

சுமார் 70 எம்டியுசி உறுப்பினர்களும் 100 ரயில்வே ஊழியர்களும் நேற்று கெரித்தா அப்பி தானா மலாயு (கேடிஎம்பி) நிறுவனத்தின் தலைமையகம் முன்பு கூடி தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்த பின்னர் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை நிறுவனத்திடம் அளித்தனர்.

இன்றுவரையில் மே 9 இல் அவர்கள் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொண்ட மறியலுக்காக ரம்மின் 56 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மற்ற 16 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ரம்மின் தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசானும் ஒருவர். கேடிஎம்பியின் மோசமான நிருவாகத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு பொறுப்பான நிறுவனத்தின் தலைவரும் பாரிசான் நேசனல் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான எலியாஸ் காடிருக்கு எதிராக சுமார் 700 தொழிலாளர்கள் மேற்கொண்ட மறியலுக்கு அப்துல் ரசாக் தலைமை ஏற்றிருந்தார்.

“மறியல் செய்வது சங்க உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான உரியாகும்”, என்று கூறிய அப்துல் ரசாக், அவர்களை வேலைநீக்கம் செய்வது சட்டத்தை மீறியதாகும் என்றார்.

நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும்

வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு முறையான விளக்கம் அளிக்க நிருவாகம் தவறினால், போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்று எம்டியுசியின் தலைமைச் செயலாளர் என். கோபால் கிருஷ்ணன் கூறினார்.

“அதிலும் பயன் இல்லை என்றால், நாங்கள் பிரதமர்துறைக்கு செல்லுவோம், ஏனென்றால் கேடிஎம்பி அரசாங்கம் சார்புடைய நிறுவனம்”, என்று அவர் கூறினார்.

பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் ஆகியோருக்கும் எம்டியுசி கடிதம் எழுதியுள்ளது. ஆனால், பதில் ஏதும் கிடைக்கவில்லை என்று கோபால் கிருஷ்ணன் கூறினார்.