பாக் லாவைப் போல் பிரதமரும் பதவியிலிருந்து தூக்கப்படலாம்

partiபிரதமர் பிஎன்னின்  தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டும்; தவறினால்  முன்னைய  தலைவர்களுக்கு  ஏற்பட்ட  நிலைதான்  அவருக்கும்.

முன்னாள் பிரதமர்  அப்துல்லா  அஹமட்  படாவி, கொடுத்த  வாக்குறுதியைக்  காப்பற்றவில்லை  என்பதால்  பதவி  இழந்ததை  பார்டி  ரக்யாட்  மலேசியா நஜிப்  அரசுக்கு  நினைவுபடுத்தியது.

அப்துல்லா  மக்களின் துன்பத்தைப்  பொருட்படுத்தாமல்  புதிய  தாராளமய  பொருளாதாரக்  கொள்கைகளை  அமல்படுத்தினார்,  உதவித் தொகைகளைக்  குறைத்தார்,  எரிபொருள்  விலையை  உயர்த்தினார்,  அதன்  விளைவாக விலைவாசி  கூடியது.

“இதையெல்லாம் செய்த  அவர்  2008 பொதுத்  தேர்தலில்  தூக்கி  எறியப்பட்டார்”, என  அக்கட்சியின்  உதவித்  தலைவர்  கோ  சுவி யோங்  கூறினார்.

இப்போதைய  அரசாங்கமும்  கடந்த  பொதுத்  தேர்தலின்போது  எரிபொருள்  விலையை  உயர்த்தப்போவதில்லை  என்று  உறுதி  கூறியதை கோ  நினைவுறுத்தினார். அப்படி  வாக்குறுதி  கொடுத்த  அரசாங்கம்  இப்போது  ரோன்97-இன்  விலையை  உயர்த்தியது  ஏன்  எனவும்  அவர்  வினவினார்.

“தெலோக்  இந்தான்,  பெங்காலான்  குபோர்  இடைத்  தேர்தல் முடிவுகளை  வைத்து  மக்கள் தங்கள்  கொள்கைகளை  ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்  என்றவர்கள்  கூறிக்  கொண்டிருந்தால்,  அடுத்த  பொதுத்  தேர்தல்  வரும்,  அப்போது  நகர்ப்புற,  கிராமப்புற   வாக்காளர்களின் ஆத்திரத்தை  அவர்கள்  உணர்வார்கள்”, என்றவர்  எச்சரித்தார்.