ஸைட்: ஐஎஸ் இருக்கட்டும், உங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கும் வன்முறையைப் பாருங்கள்

 

Forget ISமுன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் “மலேசிய இஸ்லாமிய நாடு” ஒரு வேளை இஸ்லாமிய நாட்டை விட (ஐஎஸ்) அதிக வன்முறையுடையதாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

அவர்களுடைய கொல்லைப்புறத்தில் நடத்தப்படும் வன்முறைகளைப் பார்க்குமாறு ஸைட் இப்ராகிம் பிரதமர் நஜிப்பையும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமையும் கேட்டுக்கொண்டார்.

இஸ்லாமிய நாடு (ஐஎஸ்) இயக்கம் மேற்கொண்டுவரும் வன்முறைக்கு அவர்கள் தெரிவித்திருந்த கண்டனம் குறித்து கருத்துரைக்கையில் ஸைட் இவ்வாறு கூறினார்.

“ஒருவரின் தலையைத் துண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம், ஆனால் மலேசியா இதிலிருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது என்று கேட்பது நியாயம்தானே?

“தங்களுடைய முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமயகோட்பாடுகளை மீறியவர்கள் என்பதோடு சமயத்தை அவமதிக்கும் குற்றமும் புரிந்தவர்களாவர் என்று ஐஎஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அதன் அர்த்தம் அவர்களின் நிலைப்பாடு மலேசியாவிலுள்ள சமயத் தலைவர்களிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதாகும்”, என்று ஸைட் இப்ராகிம் இன்று அவரது வலைதளத்தில் எழுதியுள்ளார்.

ஆண்டவனின் சட்டம் குறைபாடில்லாதது. ஆகவே, தெய்வ சட்டங்களை அமல்படுத்த தீர்மானிக்கையில் இதர உலக அனுபவங்கள், நன்னெறி அல்லது மதிப்பீடு முறைகளை இணைக்கவோ, தழுவவோ வேண்டிய அவசியமில்லை என்று ஐஎஸ் வாதாடலாம் என்றாரவர்.

“ஜாக்கிம் மற்றும் ஜாவி (மலேசிய இஸ்லாமிய அமைப்புகள் தங்களுடைய நிலைப்பாடு சரியானது என்று கூறுவது) போல அவர்களுடைய நிலைப்பாடு அவர்களுக்கு “சரியானதாக” இருக்கும்”, என்று ஸைட் மேலும் கூறினார்.

மலேசியாவில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பல வாரங்களாகிய பின்னரும் அக்குழந்தை மீது யாரும் உரிமை கோரவில்லை என்றால் அக்குழந்தை ஒரு முஸ்லிம் என்று கருதப்படுவது ஃபாட்வா ஆகும்.

“இதனால் அக்குழந்தை ஒரு முஸ்லிம் அல்லாத குடும்பத்தினால் தத்தெடுக்கப்படுவதை தானாகவே இழந்து விடுகிறது. சில முஸ்லிம்கள் திருமண பந்தத்திற்கு வெளியில் பிறந்த குழந்தையை தத்தெடுக்க தயக்கம் காட்டுவது நிலைமையை இன்னும் மோசாமாக்கி விடுகிறது.

“ஆக, இந்த அவல நிலையிலுள்ள குழந்தை எங்கே போகும்? இக்குழந்தையின் மேன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக்கூட தற்காக்க விரும்பவில்லை என்றால் இந்த மலேசிய இஸ்லாமிய நாடு ஐஎஸ்சைவிட கொடூரமானது இல்லை என்றாலும் அதைப் போல் வன்முறையானது என்பேன்”, என்று அவர் மேலும் கூறினார்.

பரிவை காட்டும் அடையாளங்கள் எங்கே?

“மலேசிய இஸ்லாமிய நாட்டிலிருந்து” ஐஎஸை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களான பரிவு, நியாயம் ஆகியவை இங்கு அதிமாகzaid இருக்க வேண்டும். இஸ்லாம் இவற்றை பேணுகிறது. அவற்றை தேடி அலைகிறேன் என்று அந்த முன்னாள் அமைச்சர் கூறுகிறார்.

“நான் அவற்றை போதுமான அளவிற்கு காணவில்லை”, என்று அவர் வருத்தப்பட்டார்.

“எனது கருத்துகள் சில முஸ்லிம்களுக்கு சினத்தை மூட்டும். நான் ஆண்டவனின் சட்டத்தை மாற்ற முயற்சிக்கும் துடுக்குத்தனமிக்க ஒரு தீய முஸ்லிம் என்று கூறுவார்கள்.

“ஆனால், நான் எதையும் மாற்றவில்லை. நான் இச்சட்டங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் குறித்துதான் கேள்வி எழுப்புகிறேன். நாம் அவர்களை கேள்வி கேட்கக்கூடாது என்றால், ஆண்டவனின் சட்டம் குறைபாடில்லாதது என்று வெறுமனே பிரகடனம் செய்து விட்டு அவர்களின் எதிரிகளைக் கொல்லும் ஐஎஸ் சமய குருக்களிலிருந்து நமது சமய குருக்கள் வேறுபட்டவர்கள் அல்லர்”, என்றார் ஸைட்.

ஆக, ஐஎஸுக்கு எதிராக நஜிப்பும் அன்வாரும் தொடர்ந்து கண்டனம் தெரிவிப்பதற்கு முன்பு அவ்விருவரும் இந்நாட்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கடுந்துயரங்களை தீவிரமான வகையில் கண்டறிய வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் உண்மையில், மெய்யான, அமைதியான இஸ்லாத்தை வெளிப்படுத்த விரும்பினால், அவர்கள் உள்நாட்டு முஸ்லிம்களின் சமயம் குறித்த பிரத்தியோகமான பிரச்சனைகளைக் கண்டறிய வேண்டும்.

“இவ்விரு தலைவர்களும் நாட்டிற்கு அவசியமான விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு, இதனால் அவர்கள் சில வாக்குகளை இழக்க நேரிட்டாலும் கூட, தயாராக இருக்க வேண்டும்”, என்று ஸைட் வலியுறுத்தினார்.