அரசாங்க ஜெட் எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு புத்ரா ஜெயாவிடம் விளக்கமில்லை

jetநெதர்லாந்துக்கு  அதிகாரத்துவ  அலுவல்  மேற்கொண்டிருந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதன்பின்னர்  ஐரோப்பாவில்  விடுமுறையைக்  கழிக்க  அரசாங்க  ஜெட்  விமானத்தைப்  பயன்படுத்தினாரா  என்று  நாடாளுமன்றத்தில்  கேட்கப்பட்ட  கேள்விக்கு  புத்ரா  ஜெயா  இன்னும்  விளக்கம்  அளிக்கவில்லை.

டிஏபி  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக், 9M-NAA  என்ற பதிவு  எண்ணைக்  கொண்ட  அரச  மலேசிய  ஆகாயப்  படையின்  விஐபி  ஏர்பஸ்  விமானம்  ஆகஸ்ட் 1-க்கும்  ஆகஸ்ட்  15-க்குமிடையில்  எங்கெல்லாம்  சென்றது  என்ற  விவரத்தைக்  கேட்டிருந்தார்.

அதன்  பயணத்தின்  நோக்கம்  அதற்கான  செலவு  ஆகியவற்றையும்  அவர்  தெரிந்துகொள்ள விரும்பினார்.

அதற்கு  எழுத்து  வடிவில்  அளித்த  பதிலில்  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்,  அவ்விமானம்  நஜிப்பையும்  அவரின் துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும், ஒரு  தூதுக்குழுவையும்  நெதர்லாந்துக்கு   ஏற்றிச்  சென்றதாகக்  கூறினார்.  அது  அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட  பயணமாகும்.

“அப்பயணத்துக்கு  நியாயமான  அளவில்தான்  செலவானது”, என்றாரவர்.

அந்த  அதிகாரப்பூர்வ  பயணத்துக்குப்  பின்னர்  அவ்விமானம்  எங்கு  சென்றது  என்ற  விவரம்  அந்தப்  பதிலில்  இல்லை.

அதேபோல்,  ரோஸ்மா  அதே  விமானத்தைப்  பயன்படுத்தி  இந்தோனேசியாவின்  பாடாங்  சென்று  வந்த  விவரங்களைத்  தெரிவிக்கவும்  ஷஹிடான்  மறுத்தார்.