பெர்காசா தலைவர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டுக

ibrமலாய்மொழி  பைபிளைத் தீயிட்டுக்  கொளுத்தப்போவதாக  மிரட்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  மீதான  வழக்கை  மறு-ஆய்வு  செய்து  அவர்மீது  தேச  நிந்தனை  குற்றம்  சுமத்த  வேண்டும்  என்று  பூலாய்  எம்பி  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  வலியுறுத்தியுள்ளார்.

“தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  இப்ராகிம்மீது  குற்றம்  சுமத்தத்  தவறினால்  அது  அரசாங்கத்தின்  பெயரைக்  கெடுக்கும்”, என்றவர்  கூறியதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  செய்தித்தளம்  அறிவித்துள்ளது.

பிஎன்  எம்பியும்  நாடாளுமன்ற  பொதுக்  கணக்குக்  குழுத்  தலைவருமான  நூர்  ஜஸ்லான், சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  குற்றவியல்  சட்டத்தின்கீழ்  அல்லாமல்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  இப்ராகிம்மீது  விசாரணை  செய்ய  வேண்டும்  என்றார்.

அப்படிச்  செய்தால்,   அது,  நாட்டில்  இன  நல்லிணக்கத்தையும்  ஒற்றுமையையும்  கெடுக்க  முனைவோருக்கு  எதிராக  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயனபடுத்துவதில்   அரசாங்கம்  பாரபட்சம்  காட்டுவதில்லை  என்பதற்குச்  சான்றாக  அமையும்  என்றவர்  சொன்னார்.

பைபிளைக்  கொளுத்த  வேண்டும்  என்று  கூறியதற்காக  இப்ராகிம்  அலி  ஏற்கனவே  கைது  செய்யப்பட்டு  குற்றவியல்  சட்டம்  பகுதி 298-இன்கீழ்  விசாரணையும்  செய்யப்பட்டார்.

ஆனால்,,  “இஸ்லாத்தின்  புனிதத்தைப் பாதுகாக்கத்தான்”  மலாய்மொழி  பைபிளைக்  கொளுத்தப்போவதாக   மிரட்டினார்  என்பதால் இப்ராகிம்  மீது  நடவடிக்கை  எடுக்கப்படாது  என்று  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  சுக்ரி  நேற்று  அறிவித்திருந்தார்.