கொடூரமான மலேசிய சிறையில் உதயகுமார்

 

uthya -prisonகாஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதயகுமார் தமக்குக் கொடுக்கப்பட்ட பல்துலக்கும் தூரிகையைக் காட்டி இதுதான் தமக்கு பல்துலக்குவதற்கு கொடுக்கப்பட்டது. அது முற்றிலும் தேய்ந்து போனதாகும் என்றார்.

“இதனை அவருடன் சிறையில் இருந்த ஐவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கமாக அதிகமானோர் இருப்பதுண்டு. நான் வார்டனைக் கேட்டதற்கு இதற்கு காரணம் பல்துலக்கும் தூரிகை வாங்க பட்ஜெட் இல்லை என்றார்கள்”, என்று உதயா கூறினார்.

ஹிண்ட்ராப் தலைவர் ப. உதயகுமார் சிறையிலிருந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை மலேசியாகினி குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் உதயாவுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இது போன்ற கொடுமைகளை எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முன்னர் உதயா உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். காஜாங் சிறையும் அவ்வாறு இருக்கும் என்று அவர் நினைத்திருந்தார்.

இப்போது, காஜாங் சிறையில் தமது தண்டனைக் காலத்தைக் கழித்த பின்னர், தமது பரம வைரிக்கும் கூட இது போன்றது ஏற்படக்கூடாது என்பது அவரது விருப்பமாகும்.

சிறையில் இருக்கும் போது உதயா தமது மனைவி மற்றும் வழக்குரைனர்கள் மூலம் தமது சிறைக்கால துன்பங்கள் குறித்து பல புகார்களை  அனுப்பியுள்ளார்.

இந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் என்று புத்ராஜெயாவை அவர் குற்றம் சாட்டிய பின்னர் அவருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 30 மாத கால சிறை தண்டனை விதித்தது.

கடந்த செப்டெம்பர் 17 இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரக்கு எதிரான தீர்ப்பை நிலைநிறுத்தியது. ஆனால், தண்டனையை 30 லிருந்து 24 மாதங்களுக்கு குறைத்தது. அவர் கடந்த அக்டோபர் 3 இல் விடுவிக்கப்பட்டார்.

வழக்குரைஞரான உதயா ஹிண்ட்ராப் இயக்கத்திரற்கு உயிரோட்டம் அளித்து நவம்பர் 25, 2007 இல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களைuthya -prison1 ஈர்த்து அவர்களின் உரிமைக்காக பேரணி நடத்தினார்.

தாம் சிறை சென்ற போது தன்னுடம் கொண்டு சென்றது தமது ஈடுபாடு என்றார். அதில் ஒரு வித்தியாசம் சிறைக்கு வெளியில் இந்தியர்களுக்கு மட்டும் செய்தது போலல்லாமால், சிறையில் தாம் அனைத்து இனத்தினருக்கும் குரல் கொடுத்தது என்றார்.

“சிறையில், அனைவரும் சமமாக, மிகமோசமாக நடத்தப்படுவதில் சமமாக, நடத்தப்பட்டனர். சிறையில் உண்மையிலேயே 1மலேசியா இருக்கிறது. அங்கு அனைவருக்கும் சமத்துவம்.

“சிறையில், சமமாக நடத்தப்படுகிறீர். உணவும் ஒரே மாதிரியானதுதான்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

போலீஸ் தடுப்புக்காவல் மரணம் மற்றும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் என்று இதுவரையில் கூறிவந்த உதயா, மேற்கூறியது மாறுபட்டது என்று ஒப்புக் கொண்டார்.

ஒரு நாளைக்கு பல தடவைகள் நடத்தப்படும் ஒருங்கு கூடுதலின்போது கூட அனைவரும் சமமாக தண்டிக்கப்பட்டனர் என்று அவர் விளக்கமளித்தார்.

“அங்கு எவருக்கும் சிறப்புச் சலுகை கிடையாது. இதன் விளைவு நாங்கள் அனைவரும் அதில் ஒன்றாக்கப்பட்டோம்.”

 

ஆறடிக்கு அப்பால் இருந்து சோதனை செய்யும் மருத்துவர்

 

காஜாங் சிறையில் ஆண்களுக்கான வசதிகளை, குறிப்பாக வைத்திய வசதிகளை, மேம்படுத்துவதற்கு ஏராளம் செய்ய வேண்டியுள்ளது என்று உதயா கூறினார்.

“சிறையிலிருந்த போது நான் மிக அஞ்சியது நான் நோய்க்கு ஆளாக்கக்கூடும் என்பது.”

தம்முடன் சிறையிலிருந்த ஒருவரின் நிலையைக் குறித்து அவர் பேசிய போது அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அந்த சிறைவாசிக்கு கல்லீரல் அழற்சி இருந்தது. ஆனால் சிறை வார்டன்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். ஓர் இரவு அவர் தமது படுக்கையில் பரிதாபமான நிலையில் உட்கார்ந்து இருந்ததைக் கண்டேன்.

“அடுத்த நாள் காலையில் அவர் இறந்து விட்டார். சிறை அதிகாரி அவரின் பெயரை வெண்பலகையிலிருந்து அழிப்பதை நான் பார்த்தேன்.

“எனக்குப் பக்கத்தில் இருந்த கைதியிடம் இந்த அழிப்புடன் அந்தக் கைதி சிறையில் இறந்ததற்கான குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என்று கூறினேன்.

uthya -prison2எந்தவிதமான வியாதிக்கும் ஒரே வைத்தியம்தான் – “கேகே” மாத்திரைகள் – வெறும் பேரசிட்டமோல் என்று உதயா தெரிவித்தார்.

“மருத்துவர் நம்மை பரிசோதிப்பது ஆறடி தூரத்திலிருந்து, நம்மை தொடாமல்” என்று கூறிய உதயா, சக கைதிகள் சிறை வார்டன்களிடம் பேசுவதற்கு வழக்கமாக தம்மை அவர்களின் பேச்சாளராக நியமிப்பார்கள் என்றார்.

வியாதியுற்றுள்ள கைதிகளுக்கு மருத்துவ உதவியைப் பெறுவதற்கு சற்று இளகிய மனதுடைய வார்டனின் உதவியை நாடுவதற்கு தாம் மிகக் கவனமாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

தாம் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் தமது சக கைதிகள் தாம் இல்லாதபோது அவர்களுக்காக பேச யாரும் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

மீன்டின்களைப் போன்ற கூண்டில் அடைக்கப்பட்டிருந்த போதும் தாம் ஒரு குறிப்பேடு வைத்திருந்ததின் வழி பிழைத்துக் கொண்டதாக அவர் கூறினார். அக்குறிப்பேடு சிலசமயங்களில் சோதனை செய்யப்பட்டது. தமது பென்சிலையும் எடுத்துச் சென்று விட்டனர். பின்னர், தம்மை சிறையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றினர் என்றாரவர்.

தமக்கு இக்கடும் சோதனை என்ற அவர், மற்ற கைதிகள் இதைவிட மோசமானதை அனுபவித்தனர் என்றார்.

கைதிகள் நாள்தோறும் கொடுமைபடுத்தப்பட்டனர். வார்டன்களிடம் எவரும் எதிர்த்து பேச முடியாது. அவர்களின் வன்முறை மற்றும் கூச்சல் பயத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

கைதிகள் வெறும் அடிமைகளாக நடத்தப்பட்டனர், அவர்கள் தாக்கப்பட்டனர், உரத்த குரலில் மடக்கப்பட்டனர், மோசமாக நடத்தப்பட்டனர்.

இவற்றை எல்லாம் தாண்டி, வார்டன்கள் மீதான பயம் கைதிகளை ஒன்றிணைத்தது.

சிறைக்கைதிகளிடம் காணப்பட்ட ஒற்றுமை பற்றி குறிப்பிட்ட உதயா, வேறுபட்ட இனக் கைதிகள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். மலாய்க்கார கைதி சீனருக்கு உதவினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய கைதிக்கு ஒரு மலாய்க்காரர் தமது விரல்களைப் பாவித்து அவர் மலம் கழிக்க உதவினார் என்பதை சுட்டிக் காட்டினார்.