அன்வாரின் உரையைக் கேட்க யுஎம் வாயிற்கதவு முன்பு கூட்டம் கூடுகிறது

 

Jpegஅன்வார் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்கலைக்கழகம் மாணவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு பேசுவதைக் கேட்க பல்கலைக்கழக முன்வாயிலில் கூட்டம் கூடியுள்ளது.

சுமார் 500 மாணவர்களும் அன்வார் ஆதரவாளர்களும் கோலாலம்பூர் கேட்டின் முன்பு மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் அன்வாருக்காக காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவதற்கு அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள “அன்வார் இப்ராகிம்: 40 ஆண்டுகள் யுஎம்மிலிருந்து சிறைக்கு” என்ற தலைப்பிலான உரை நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கக்கூடாது என்ற தடை உத்தரவை யுஎம் மாணவர் விவகார இலாகா அனைத்து மாணவர்களுக்கும் இன்று மாலை மணி 6.00 அளவில் இ-மெயில் செய்துள்ளது.

யுஎம் வளாகத்திற்குள் யும் பணியாளர் அல்லாதவர்கள் மற்றும் மாணவர்கள் நுழையாமல் தடுப்பதற்காக பாதுகாவலர்கள் அனைத்து நுழைவாயில்களையும் வாயிற்கதவுகளையும் மூடியுள்ளனர்.

இதன் விளைவாக உள்ளே செல்ல முடியாத மாணவர்கள் “buka pagar” என்று முழக்கமிட்டனர்,

அங்கு குழுமியிருக்கும் மக்கள் வாயிற்கதவுகளை ஆட்டி உள்ளேயிருக்கும் மாணவர்களை வெளியே விடுமாறு குரல் கொடுத்தனர்.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு குழுமியிருக்கும் மக்களின் மத்தியில் யுஎம் சட்ட துணைப் பேராசிரியர் அஸ்மி ஷாரோமும் காணப்பட்டார்.

 

யுஎம் வாயிற்கதவுகளை உடைத்து மாணவர்கள் உள்ளே சென்றனர் (இரவு மணி 9.00)

umalaya2நூற்றுக்கணக்கான மாணவர்களும் தன்னார்வலர்களும் யுஎம்மின் கோலாலம்பூர் வாயிற்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

“Buka, buka” என்று முழக்கமிட்டுக் கொண்டே மாணவர்கள் பூட்டப்பட்டிருந்த வாயிற்கதவை உடைத்தனர்.

பின்னர், உரை நிகழ்த்தப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அங்கு அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.