ஒருவரை சிறையிலடைத்தால், 10,000 பேர் எழுவர்

 

umalaya6மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுவதற்கு பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர் அங்கு பேசினார்.

2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் முன்னதாக ஏற்பாடு செய்திருந்தவாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தின்முன் உரையாற்றுவதை சாதித்துக் காட்டினர்.

மாணவர்களும் தன்னார்வலர்களும் புடைசூழ தேவான் துங்கு சான்செலர்முன் நின்ற அன்வார் umalaya9இப்ராகிம், “நான் இங்கு பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?”, என்ற கேள்வியுடன் தமது உரையைத் தொடங்கினார்.

தமக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் தாம் விடுவிக்கப்பட வேண்டியது “கட்டாயமானதாகும்” என்றார்.

“நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை கைவிடும் என்று நான் இன்னும் நம்புகிறேன்”, என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

தமக்கு அளித்த ஆதரவுக்கும், துணிந்து மனச்சாட்சியின் குரலாக இருந்ததற்கும் மாணவர்களுக்கு அன்வார் நன்றி கூறினார்.

umalaya7தமது உரையின் முடிவில் அன்வார் இப்ராகிம் மாணவர் மன்ற தலைவர் பகாமியின் கையைப் பிடித்து உயர்த்தி அவரை இந்நாட்டின் நம்பிக்கை என்று பாராட்டினார்.

சுமார் இரவு மணி 10.30 அளவில் கூட்டத்தினர் கலையத் தொடங்கினர். பின்னர் அன்வார் வளாகத்தை விட்டு அவரது நான்குச்சக்கர வண்டியில் கிளம்பினார்.

“ஜனநாயகத்திற்கான நல்ல அறிகுறி”

பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி “நாடு ஜனநாயகத்தை அடைவதற்கான நல்ல அறிகுறி” என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.umalaya8

தங்களுடைய உரிமைக்காக இளைஞர்கள் எழுந்து நின்றால், அது “உண்மையான மாற்றத்திற்கான” சமிக்கையாகும் என்று நெகாரா-கு அமைப்பின் புரவலரான அம்பிகா கூறினார்.

அக்கூட்டத்தில் பேசிய டிஎபி சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹென்னா இயோ, குதப்புணர்சி குற்றத்திற்காக அன்வாரை இன்னொரு ஐந்தாண்டுக்கு சிறையிலடைப்பது நீதியை நிலைநாட்டியதாகாது என்றார்.

“அப்படியே, அன்வார் சிறை சென்றாலும், போராட்டம் அத்துடன் நிற்கப்போவதில்லை. ஒருவரை சிறையிலிட்டால், 10,000 பேர் எழுவர்”, என்று அவர் கூறினார்.

அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல், அன்வாரின் மேல்முறையீடு விசாரணை நாளை (அக்டோபர் 28) பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது. அவர் தமது மேல்முறையீட்டில் தோல்வி கண்டால், அவர் சிறையிலடைக்கப்படுவார்.