எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வழக்கு நடைபெறும் கூட்டரசு நீதிமன்றத்தில் பார்வையாளர்களுக்காக சுமார் 70 இருக்கைகள் உள்ளன. ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னதாகவே அத்தனையும் நிரப்பப்பட்டு விட்டன.
இருக்கைகள் கிடைக்காதவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அப்போது அன்வார் குறுக்கிட்டு, “இருக்கைகள் இல்லாவிட்டால் என்ன, இங்கே கூண்டுக்குள் (இடமிருக்கிறது) வந்து என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள்”, எனக் கிண்டலடித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், ‘லீதல் வெபன்’ கதாநாயகன் மெல் கிப்சன் தம்மை அழைத்து ஆதரவாக அறிக்கை எதுவும் விடுக்கவா என்று வினவியதாகக் கூறினார்.
“விடுக்கலாம், ஆனால், குடியை(மதுவை) ஆதரித்து அல்ல என்று அவரிடம் கூறினேன். பதிலுக்கு அவர் ‘ஒன்றை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அரசியலுக்குள் நுழையாதே என்பதுதான் அது’ என்றார்”, என மெல் கிப்சனுடன் நடந்தை சுருக்கமான உரையாடல் பற்றி விவரித்தார் அன்வார்.