சேவியர்: அன்வாருக்கு வழங்கும் தீர்ப்பு நீதித்துறையின் களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும்

XavierJayakumarபேரரசரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மக்கள் கூட்டணித் தலைவருமான அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இந்நாட்டின் நீதித்துறை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும் என்பதே மலேசிய மக்களின் ஆசை என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

முழுக்க அரசியல் காரணங்களுக்காக எவர் மீதும் குற்றம் சுமத்துவது, தண்டிப்பது உலகில் எங்குமே நடக்கக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. திறந்த உலகமய கொள்கையைப் பின்பற்றி எல்லாத் துறைகளிலும் அதனைத் திணித்துவரும் மலேசியா போன்ற ஒரு நாட்டில், உலகளாவிய நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை வேண்டும்.  அரசியல் பழிவாங்களுக்காக  நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று நாட்டு மக்கள்  எண்ணுவதால், மக்கள் இந்த வழக்கின் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றனர் என்றாரவர்.

 

நேற்று திங்கட்கிழமை மலாயா பல்கலைக்கழகத் துங்கு வேந்தர் மண்டபத்தின் வெளியில் மின் தடை ஏற்படுத்தி, இருள் சூழ்ந்த நிலையிலும் Jpegபல மிரட்டல்கள் மற்றும் தடைகளை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அன்வார் உரை நிகழ்த்தினார். அங்குக் கூடிய ஆயிரக்கணக்கான  கற்றவர்கள், நாட்டின் மேம்பாட்டில், நற்பெயரில் அக்கறையுள்ள பட்டதாரி மாணவர்கள், இந்தக் குற்றச்சாட்டு பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்று கருதுவதாலேயே அன்வாரை அங்கு அழைத்து உரையாடக் கேட்டுக் கொண்டனர். அதே போன்று நாட்டில் பல பொது அமைப்புகளும் இந்த வழக்கு மீது, தங்கள் அவநம்பிக்கையைத் தெரிவித்துள்ளன என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.

 

அதனையே பக்கத்து நாட்டு நாடாளுமன்ற அவைகள் உட்பட பல உலக நாடுகளும், செய்து வருகின்றன, அவை  அனைத்துக்கும் காரணம், ஆரம்பம் முதல் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் அன்வாரை  அவமதிக்கும் அல்லது பழி வாங்கும் நோக்கம் கொண்டதாக இருப்பதே! அந்தக் காரணத்துக்காகவே இன்று அதிகமான மக்கள் புத்ராஜெயாவில் கூடியுள்ளனர். பொது மக்களின்  நோக்கம் எந்தத் தரப்பையும் நிர்ப்பந்திப்பதல்ல; அன்வாருக்கு நீதிகிடைப்பதைக் காண்பது மட்டுமே அவர்களின் நோக்கம் என்றாரவர்.

 

அநீதியான முறையில் அன்வார் இப்ராஹிம் தண்டிக்கப்படக்கூடாது, அதனால் நம் நாட்டின் நீதித்துறைக்கும் நாட்டின் கௌரவத்துக்கும் மேலும் ஏற்படும் அவமரியாதை குறித்து மக்கள்  கலக்கம் கொண்டுள்ளதை இது காட்டுகிறது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

நீதித்துறையின் மீது படிந்துள்ள களங்கத்தைத் துடைக்கும் வண்ணமும், நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றும் வண்ணமும் நீதிமன்றத் தீர்ப்பு அமைய வேண்டும் என்ற மலேசிய மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றப்படி நீதிமன்றத் தீர்ப்பு  அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்