இளைஞர் தினச் செலவு ரிம93 மில்லியன் மீதான கணக்கறிக்கை எங்கே?

mafuzபுத்ரா  ஜெயாவில்  ஆண்டுதோறும்  கொண்டாடப்படும்  இளைஞர்   தினத்துக்காக  2011 தொடங்கி  கடந்த  நான்காண்டுகளாக ரிம93 மில்லியன்  செலவிடப்பட்டிருக்கிறது  என்று  கூறும்  பாஸ் கட்சியின்  பொக்கோக்  செனா எம்பி  மாபூஸ் ஒமார்,   அச்  செலவினம்  மீதான  கணக்குத்  தணிக்கை  அறிக்கை வெளியிடப்பட  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

2011-இல்,  இளைஞர்  தினத்துக்குச்  செலவான  தொகை  ரிம16 மில்லியன். அதுவே 2014-இல், ரிம30 மில்லியனாகக்  கூடியிருக்கிறது.

நேற்று  பிரதமர்  துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம், பல  சர்ச்சைகளை  உருவாக்கிய  இளைஞர்  தினச்  செலவுக்  கணக்குமீது  ஆய்வு  மேற்கொள்ளப்பட்டதையும்  தணிக்கை  அறிக்கை  தயாரானதையும்  ஒப்புக்கொண்டார்.

ஆனால், கணக்குத் தணிக்கை  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்ட  பரிந்துரைகளைக்  கவனத்தில்  கொள்ளவும்  தேவையான  திருத்தங்களைச்  செய்யவும்  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சு  முடிவு  செய்திருப்பதால்  அது  பொதுவில்  வெளியிடப்படாது  என்றார்.

இந்த  விளக்கம்  மாபூஸுக்கு  திருப்தி  அளிக்கவில்லை.  “இதில்  என்ன  பிரச்னை. ஒவ்வோரு  தணிக்கை  அறிக்கையிலும்  சம்பந்தப்பட்ட  அமைச்சு  அல்லது  நிறுவனத்தின்  பதிலைக்  மொண்ட ஒரு  குறிப்பும்  இணைக்கப்பட்டிருக்கும்.  அதை  ஏன்  வெளியிடக்கூடாது”, என்றவர்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.