உணவில் அரசியல் வேண்டாம்: பினாங்கு சிஎம்-முக்கு என்ஜிஓ அறிவுறுத்து

ngoபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், அரசியலையும்  உணவையும்  கலந்து  நேர்மையற்ற ஆட்டத்தில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  என்ஜிஓ ஒன்று  வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு  சமையல்காரர்களை  நீக்கிவிட்டு  உள்நாட்டுச்  சமையல்காரர்களை  அமர்த்திக்கொள்ள  வேண்டும்  என்று    பினாங்கு  முனிசிபல்  மன்றம்  எச்சரித்திருப்பதாக  ஆறு  உணவகங்கள்  புகார் செய்துள்ளன  என்று  Pertubuhan Minda dan Social Prihatin (பிஎம்எஸ்பி)  தலைவர்  ராமேஷ்  ராவ்  கூறினார்.

வெளிநாட்டுச்  சமையல்காரர்களுக்குத்  தடைபோடும்  லிம்மின்  நடவடிக்கை  பினாங்கில்  பல்வேறு  இனங்களிடையே  சினத்தைத்தான் தூண்டிவிடும்  என  ராமேஷ், இன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“இது அரசியல்  நோக்கம்கொண்ட  செயல். இனவாதப் போக்கும்  தென்படுகிறது. 13வது  பொதுத்  தேர்தலுக்குப்பின்  லிம்முக்கு  இந்தியர்களினதும்   இந்திய- முஸ்லிம்களினதும்  ஆதரவு  குறைந்திருப்பதை  நீங்கள் கவனித்திருக்கலாம். இது  தொடர்ந்து  குறையப் போகிறது”, என்றாரவர்.

வெளிநாட்டுத்  தொழிலாளர்களை  விரட்டி  அடித்தால் இந்தியர்களினதும்  இந்திய- முஸ்லிம்களினதும்  உணவுத்  தொழில்  முடங்கிப்  போகும்    என்பதை  லிம்  இந்நடவடிக்கைவழி   மறைமுகமாக தெரிவிக்க  முயல்கிறார்  என்று ராமேஷ்  குறிப்பிட்டார்.

இந்தத்  தொல்லை  நிற்காவிட்டால்,  உணவக  உரிமையாளர்கள்  கடுமையான  நடவடிக்கையில்  இறங்குவர்.

“அடுத்த வாரம்  அவர்கள்  தடையுத்தரவை  நீக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன்  பினாங்கு  மாநில  அரசுக்கு  மகஜர்  ஒன்றை  அனுப்புவார்கள்”,  என  ராமேஷ்  மேலும்  சொன்னார்.