டிஏபி எம்பி டோனி புவா, தாம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) பற்றிப் பேசுவதை பிஎன் தடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தடை விதிக்கப்படுவது பற்றியும் அவர் கவலைப்படவில்லை. அது அவ்விவகாரம் தொடர்பில் தம் தரப்பை எடுத்துரைக்க “பொன்னான வாய்ப்பாக” அமையும் என்றாரவர்.
நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானும் லெங்கோங் ஷம்சுல் அம்னோ எம்பி அனுவார் நகரியாவும் தாமை நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவின் விசாரணைக்கு அனுப்பத் தீர்மானம் கொண்டுவர எண்ணியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-ஆன புவா இவ்வாறு கூறினார்.
அவ்விருவரும், பட்ஜெட் 2015 விவாதத்தின்போது தாம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறிக்கொள்கிறார்கள் என புவா குறிப்பிட்டார்.
“நான் தவறாக பேசியிருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரோ துணை அமைச்சரோ என்னைத் “திருத்தி” எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்திருக்கலாம்.
“ஆனால், குழு நிலையில் விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய (நிதி துணை அமைச்சர்) சுவா டீ யோங், 1எம்டிபி விவகாரத்தை ஒரு கொள்ளை நோயைப் போல் கருதி ஒதுக்கிவைத்ததோடு நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதிலும் அளிக்கவில்லை”, என புவா கூறினார்.