ஜோகூரில், ஜெசிஒய் எச்டிடி டெக்னலோஜி (ஜெசிஒய்) தொழிற்சாலையில் அன்னிய தொழிலாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை போலீசார் மூடிமறைக்க முயல்வது கண்டு மலேசிய தொழிசங்க காங்கிரஸ்(எம்டியுசி) அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஜெசிஒய் தொழிலாளர்களின் தொழிலியல் நடவடிக்கை தொழிலாளர்களுக்கிடையிலான தப்பெண்ணத்தால் உண்டானது என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் நாடாளுமன்றத்தில் கூறியது ஏமாற்றமளிப்பதாகவும் எம்டியுசி கூறியது.
ஜெசிஒய் தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் பற்றி விவாதிக்க முத்தரப்புப் பேச்சுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எம்டியுசி செப்டம்பர் 4-இல், மனிதவளத் துறைக்குக் கடிதம் எழுதியது. இதுவரை பதில் இல்லை.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விவகாரங்களைத் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டாதிருப்பது வருத்தமளிப்பதாக எம்டியுசி-இன் தலைமைச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஜெசிஒய் தொழிலாளர் விவகாரம் பற்றி விவாதிக்க முத்தரப்புப் பேச்சுகளைக் கூட்டுவதில் மனிதவள அமைப்பு மேலும் தாமதம் காட்டக்கூடாது என்றவர் கேட்டுக்கொண்டார்.