பெர்காசா: சிஎம் ‘புனித பன்றி’அல்ல, அவரைக் கைது செய்

penangபெர்காசா,  பினாங்கு  முதலமைச்சர்  லிம் குவான்  எங் அம்மாநிலத்தில்  முஸ்லிம்-அல்லாதார்   அல்லாஹ்  என்ற  சொல்லைத்  தாராளமாகப்  பயன்படுத்தலாம்  என்று கூறியதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  இன்று  பல  கண்டனக்  கூட்டங்களை  நடத்தியது.

பேராக்கில்,  ஈப்போ  டிஏபி  அலுவலகத்துக்கு வெளியில்  நடந்த  ஆர்ப்பாட்டத்தில்  பெர்காசா  உறுப்பினர்கள்  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவரிடம்   முரட்டுத்தனமாக  நடந்து  கொண்டதுடன்  கிறிஸ்மஸ், புத்தாண்டு  வாழ்த்து  பதாதை  ஒன்றையும்  கிழித்தெறிந்தனர்.

பினாங்கில் மாநில  அரசு  அலுவலகங்கள்  உள்ள  கொம்டார் கட்டிடத்துக்கு  வெளியில்  நடந்த  பெர்காசா  ஆர்ப்பாட்டத்துத்  தலைமையேற்ரிருந்த  மாநில  பெர்காசா  இளைஞர்  தலைவர்  முகம்மட்  ரிஸுவாட்  முகம்மட்  அஸுடின் லிம்மை  கைது  செய்ய  வேண்டும்  என  அறைகூவல்  விடுத்தார்.

“அவர்  ஒன்றும்  புனித  பன்றி  அல்ல. அவர் ஒரு  காட்டுப் பன்றி. அவரைப்  பினாங்கிலிருந்தே  துரத்தி  அடிக்க  வேண்டும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

“அல்லாஹ்  என்ற  சொல்லைப்  பயன்படுத்தும் உரிமை  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உண்டு. லிம், முதலமைச்சர்  பதவியைத்  தவறாகப்  பயன்படுத்தி   இஸ்லாமிய விவகாரங்களில்  தலையிடக்  கூடாது.

“போலீஸ்  விசாரணை  செய்து  அவரைக்  கைது  செய்ய  வேண்டும். போலீஸ் எதுவும்  செய்யாதிருந்து  அது  விரும்பத்தகாத  விளைவுகளுக்கு இட்டுச்  சென்றால்  போலீசே  அதற்குப்  பொறுப்பு”, என்றும்   ரிஸுவாட் எச்சரித்தார்.