கட்சியின் தலைமைச் செயலாளருக்கு எதிராக மஇகா தலைவர்கள் போலீஸ் புகார்

mic leadersகடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் நிகழ்ந்த குழப்பத்திற்கு காரணமானவர்கள் என்று மஇகா உறுப்பினர்களுக்கு எதிராக மஇகாவின் தலைமைச் செயலாளர் எ. பிரகாஷ் ராவ் போலீஸ் புகார் ஒன்று செய்திருந்தார். அப்புகாருக்கு எதிராக சில மஇகா தலைவர்கள் இன்று ஒரு போலீஸ் புகார் செய்தனர்.

பிரகாஷ் சில மஇகா தலைவர்களுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை போலீஸ் புகார் செய்திருந்தார். அதில் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன், கட்சியின் வியூக இயக்குனர் எஸ். வேள்பாரி மற்றும் அம்பாங் ஜெயா கிளைத் தலைவர் என். முனியாண்டி ஆகியோரும் அடங்குவர்.

“இப்போலீஸ் புகாரை செய்ததின் மூலம் தலைமைச் செயலாளர் (பிரகாஷ்) பெரும் தவறு செய்து விட்டார். இது மஇகாவின் நற்பெயரை பாதிக்கும்”, என்று முனியாண்டி இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

இதர மஇகா தலைவர்களுடன் சேர்ந்து இப்புகாரை டாங் வாங்ஞி போலீஸ் நிலையத்தில் அவர் செய்தார்.

போலீஸ் புகார் செய்ததற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதோடு புகாரில் கூறப்பட்டுள்ளவர்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம்  அவருக்கு தங்களுடைய வழக்குரைஞர் மூலம் அனுப்பப்படும் என்று முனியாண்டி மேலும் கூறினார்.

“நாங்கள் தலைவரை எதிர்க்கவில்லை. அவரை பதவி விலகச் சொல்லவில்லை. நாங்கள் பிரச்சனைக்கு (மறுதேர்தல்) சுமூகத்தீர்வு காண விரும்புகிறோம்”, என்று முனியாண்டி வலியுறுத்தினார்.