கூட்டரசு சாலைகளில் 90 பகுதிகள் மூடப்பட்டுள்ளன

roadஅரசாங்கம்  கிழக்குக்  கரையில்  வழக்கத்துக்கு  மாறாக  இவ்வளவு  மோசமான  வெள்ளம்  ஏற்பட்டதற்கான  காரணத்தை ஆழமாக  ஆராயும்  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின் யாசின்  கூறுகிறார்.

வெள்ளம்  வடிந்த  பின்னர், அந்த  ஆய்வு  மேற்கொள்ளப்படும்  என  அவர்  தெரிவித்ததாக  பெர்னாமா  அறிவித்தது.  ஆய்வில், பருவ நிலை  மாற்றங்கள், காடழிப்பு  நடவடிக்கைகள், அடிப்படைக்  கட்டமைப்புகள்  வசதிகளின்  குறைபாடுகள்  எனப்  பல  கூறுகள் கவனத்தில்  கொள்ளப்படும்.

இதனிடையே, நான்கு  மாநிலங்களில், கூட்டரசு  சாலைகளின்  90  பகுதிகள்  மூடப்பட்டுள்ளதாக  பொதுப் பணித்  துறை  அறிவித்துள்ளது. கடுமையாக  பாதிக்கப்பட்டது  பகாங்தான். அங்கு 54  பகுதிகள்  மூடப்பட்டுள்ளன.

அதற்கு  அடுத்து  திரெங்கானு. 18 பகுதிகள்  மூடப்பட்டுள்ளன. கிளந்தானில்  13 பகுதிகளும்  பேராக்கில் 5 பகுதிகளும் மூடப்பட்டன.

சாலைகளில்  பல  பகுதிகள்  மூடப்பட்டதற்கு  அவற்றில்  வெள்ளநீர்  தேங்கி  நிற்பதே  காரணமாகும்.

ஆனால், திரெங்கானுவில்  அது  மட்டும்  காரணமல்ல.  18 சாலைப்  பகுதிகளில்  பாதியில்தான் வெள்ளநீர்  நிற்கிறது. இன்னொரு  பாதி, நிலச்  சரிவுகளின்  பாதிப்பால்  அல்லது  சாலைகள் இடிந்து  விழுந்து  விட்டதன்  காரணமாக  மூடப்பட்டுள்ளன.