பிகேஆர்: ரோன்95 மற்றும் டீசலின் விலை ரிம1.90-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்

ron95பார்க்கப்போனால்  மலேசியர்கள்  ரோன்95-க்கும்  டீசலுக்கும்  ரிம1.90க்கும்  குறைவான  விலையைத்தான்  கொடுக்க  வேண்டும்  என்கிறார்  பிகேஆர்  எம்பி  ரபிஸி  ரம்லி.

நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்,  ஜனவரியிலிருந்து  அவ்விரு  எரிபொருள்களின்  விலை ரிம்1.90-க்கும்  ரிம1.95க்குமிடைப்பட்டு  இருக்கும் என்று  கூறியிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.

ரோன்95-இன்  விலை  லிட்டருக்கு  ரிம 1.75 ஆகவும், டீசல்  ரிம 1.95 ஆகவும்  இரூப்பதுதான்  நியாயம்  என  பாண்டான்  எம்பி  தெரிவித்தார்.

ஏனென்றால்,  ரோன்95, டீசல்  ஆகியவற்றின்  சந்தை  விலை  டிசம்பர்  30-இல்  முறையே ரிம 1.43 ஆகவும்  ரிம 1.56 ஆகவும்  குறைந்தது.

இம்மாதத்  தொடக்கத்திலிருந்தே  சந்தை  விலை  குறைந்திருப்பதற்கு  ஏற்ப  பெட்ரோல், டீசல்  விலைகளைக் குறைத்து  வந்திருக்க  வேண்டும்.

“அதை  மக்களுக்குத்  தெரிவிக்காமல், மக்கள்  கூடுதல்  விலை  கொடுப்பதால்  கூடுதல் பெட்ரோல்  வரியைப்  பெற்று அபரிதமான  ஆதாயத்தை  அறுவடை  செய்து  வருகிறது பாரிசான்  நேசனல்.

“டிசம்பர் மாதத்தில்  மட்டும்  பெட்ரோல்  வரி  வழியாக  அரசாங்கத்துக்கு  இப்படி  கமுக்கமாக கிடைத்த  வருமானம் ரிம633 மில்லியன்”.

இந்த  பெட்ரோல்  வருமானம்  எப்படி  செலவிடப்பட்டது  என்பதை  விளக்குவீர்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குக்  கோரிக்கை  விடுத்தார்  ரபிஸி.