பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங், பாலியல் வல்லுறவு மீது சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜயிஸ்) தெரிவித்த கருத்தைக் குறைகூறியது பற்றி போலீசிடம் விளக்கமளிக்க முன்வந்துள்ளார்.
“டிவிட்டரில் ஐஜிபி-இன் பதிவைப் பார்த்தேன். போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் பாலியல் வல்லுறவு தொடர்பில் ஒரு மாற்றுக் கருத்தை வெளியிட்டேன். அவ்வளவுதான்”, என சொங் எங் கூறினார்.
பினாங்கில் மகளிர் விவகாரங்களைக் கவனிக்கும் ஆட்சிக்குழு உறுப்ப்பினராக எங், ஜயிஸ் கடந்த வெள்ளிக்கிழமை அதன் தொழுகையுரையில் பாலியல் வல்லுறவு பற்றித் தப்பும்தவறுமான தகவல்களைத் தெரிவித்திருந்தது என்றார்.
அந்த உரை “மரியாதைக் குறைவானது, ஆண்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது”, என்றவர் சொன்னார்.
அந்தத் தொழுகையுரையில், பெண்கள் முகத்தை மூடிக்கொள்வதன்வழி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்க்கலாம். பாலியல் வல்லுறவு, கள்ளத்தனமான உடலுறவு, தகாத பாலியல் உறவுச் சம்பவங்களும் குறையும் என்று கூறப்பட்டது பற்றி எங் தம் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
நேற்றிரவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், தொழுகையுரையைக் குறை கூறியதற்காக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரைப் போலீசார் விசாரிப்பர் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
“உணர்ச்சிவயப்பட வைக்கும் கருத்துகள் தெரிவிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அடிக்கடி நினைவுபடுத்தியுள்ளனர். ஆனால், யாரும் அதைக் கவனிப்பதில்லை”, என்றவர் டிவிட்டரில் கூறினார்.