நீதிக்கும் சனநாயகத்திற்கும் கிடைத்த மோசமான தோல்வி!

anwar 5சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம், உச்சநீதிமன்றம் அன்வாரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியது தமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது என்றார். “அன்வாரை அரசியலில் இருந்து அகற்ற மேற்கொண்ட அரசாங்கத்தின் சதிக்கு கிடத்த ஒரு கீழ்த்தரமான வெற்றி, மலேசியாவின் நீதிக்கும் சனநாயகத்திற்கும் கிடைத்த ஒரு மோசமான தோல்வி” என்று குறிப்பிட்ட அவர், இது மலேசியாவுக்கு ஒரு கறுப்பு நாளாகும் என்றார்.

2008-ஆம் ஆண்டு நடந்த அரசியல் மாற்றங்களுக்கு அன்வார் முக்கிய காரணமாவார்.  மக்கள் கூட்டணி உருவாக காரண கர்த்தாவாக இருந்தவரும் அவர்தான். சிறுபான்மை இனமான இந்தியர்களின் அரசியல் உரிமைக்கு ஒரு வலுவை கொடுத்தவரும் அவர்தான்.

தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் அரசியல் பலம் தேவைப்படுகிறது. அதற்காக தீர்வற்ற பல பிரச்சனைகள் தீர்வுகாண 2008 –ஆம் முதல் அது இந்தியர்களை ஒரு புதிய பார்வையில் காண்கிறது. மாற்று அரசியல் வழிமுறை இல்லையென்றால் தேசிய முன்னணியின் புறக்கணிப்பு அப்படியே இருந்திருக்கும் என்கிறார் ஆறுமுகம்.

அன்வாரை குற்றவாளியாக்க ஒரு திட்டம் இருந்ததை நீதி மன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை. அன்வாரின் தற்காப்பு குழு நீதிமன்றத்தில் கூறிய பல வாதங்கள் புறக்கணிக்கப்பட்டன.

சைபுல் மூத்த போலீஸ் அதிகாரி முகமட் ரோட்வான் முகமட் யுசுப்பை சந்தித்தது, பிறகு ரோட்வான் தம்மை அவரது தொலைபேசியில் அழைத்தது, அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொன்கோர்ட் ஹோட்டலில் ஜூன் 24, 2008 இல் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, அன்றிரவே சைபுல் அன்றைய துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது தாமான் டூத்தா இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இவையெல்லாம் எதற்காக என்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 28, 2008-இல் சைபூல் ஒரு போலிஸ் புகார் செய்கிறார், அதில் அன்வார் தன்னைக் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறுகிறார். இதில் உண்மையில்லை என்றது உயர் நீதி மன்றம், மேல்முறையீட்டில் அன்வார் குற்றவாளியாக்கப்பட்டு 5 வருடங்கள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது. அதை இன்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.