சிருல்: சொன்னதைச் செய்தேன், அதன் பலனை அனுபவிக்கிறேன்

 

Sirulபெரும் மனக்குழப்பத்திலிருக்கும் முன்னாள் போலீஸ் காமாண்டோ சிருல் அஸார் ஒமார் நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றியதாக விடாப்பிடியாக கூறிக்கொண்டிருக்கிறார். சொன்னதைச் செய்ததற்காக சிருல் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

“நான் இன்று இறந்தால், எனக்கு நிம்மதி கிடைக்காது, ஏனென்றால் என்னிடம் சொல்லப்பட்டதை நான் செய்தேன். அதற்கு கைமாறாக எனக்கு இதுதான் கிடைத்தது”, என்று சிருல் ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசி வழியாக மலேசியாகினியிடம் கூறினார்.

அல்தான்துயாவை கொலை செய்த குற்றத்திற்காக சிருலுடன் இன்னொரு போலீஸ் காமாண்டோவான தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹதிரிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் சட்ட அமைவு முறை குறித்தும் சிருல் அதிருப்தி அடைந்துள்ளார்.

தமக்கு அதிகாரியான துணை சூப்ரிண்டெண்டன் மூசா சாப்ரி ஒரு சாட்சியாக அரசு தரப்பால் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மூசா முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் தற்காப்பு அமைச்சரான நஜிப் அப்துல் ரசாக்கின் மெய்க்காப்பாளாராவார். சிருலும் அஸிலாவும் கொலைக் குற்றத்திலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது இவர் இவ்வழக்கின் உயர்நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியாக அழைக்கப்படாததும் ஒரு காரணமாகும்.

கடந்த மாதம் அரசு தரப்பு செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட பெடரல் உச்சநீதிமன்றமும் இதனைப் பொருட்படுத்தத் தவறி விட்டது என்று சிருல் வருத்தப்பட்டுக் கொண்டார்.