லண்டனில் ஹோட்டல் வாங்கியதன் தொடர்பில் பெல்டா தலைவரின் மகனிடம் எம்ஏசிசி விசாரணை

hotelலண்டனில்  பல  மில்லியன்  ரிங்கிட்டில்  ஆடம்பர  தங்கும்  விடுதி  வாங்கப்பட்டது  பற்றி  விசாரிப்பதற்காக  மலேசிய  ஊழல்- தடுப்பு  வாரியம் (எம்ஏசிசி),  கூட்டரசு  நில  மேம்பாட்டு  நிர்வாக(பெல்டா) தலைவர்  இசா  சமட்டின்  மகனை நேற்று  அழைத்திருந்தது.

“அது  ஒரு  கைது  அல்ல. விசாரணைக்கு  உதவியாக  அவரிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்யப்பட்டது”, எனத் தகவலறிந்த   வட்டாரம்  ஒன்று  மலேசியாகினியிடம் தெரிவித்தது.

ரிம330  மில்லியனில்  பிளாசா  கென்சிங்டன்( இப்போது பார்க்  சிடி  ஹோட்டல்) வாங்கப்பட்டது  பற்றி  எம்ஏசிசி  விசாரணை  செய்து  வருகிறது.

பிளாசா கென்சிங்டனை  பெல்டா  வாங்கியது.

இதன் தொடர்பில்  பெல்டாவின்  துணை  நிறுவனமான  பெல்டா முதலீட்டு  கார்ப்பரேசனின்  அதிகாரி  ஒருவரை  அதிகாரிகள்  தடுத்து  வைத்திருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  இடைத் தரகர்  ஒருவரும்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறாராம்.

எம்ஏசிசி-இன்  சிறப்பு  நடவடிக்கைகளுக்கான  இயக்குனர்  பாஹ்ரி  முகம்மட்  ஸின்னைத்  தொடர்புகொண்டு  பேசியதில்  அவர்  இசாவின்  மகன்  விசாரணைக்கு  அழைக்கப்பட்டதை   உறுதிப்படுத்தவுமில்லை  மறுக்கவுமில்லை.

“பொது (பெல்டாவின்)ப்  பணத்தைக்  கொண்டு  அதை  வாங்கியதில் சம்பந்தப்பட்டவர்களைக்  கண்டுபிடிக்க  இன்னும்  முயன்று  கொண்டிருக்கிறோம்”. என பாஹ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

2013-இல்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், பெல்டா  லண்டனில்  ஹோட்டல்  வாங்குவது  ஏன்  என்று  கேள்வி  எழுப்பினார்.

“ஹோட்டல்  வாங்குவது  ஒரு  மில்லியன்  பெல்டா  குடியிருப்பாளர்களுக்கு  எந்த  வகையில்  பயன் தரப்  போகிறது?”, என்றவர்  வினவினார்.