போலீஸ் தடுப்புக்காவல் மரணங்கள்: அரசாங்கம் குருடாகி விட்டதா, திறமையற்றதாகி விட்டதா, அல்லது இரண்டுமா?

 

kula-280x300கையில் விலங்கிடப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சி. சுகுமாரின் மரணத்திற்கு போலீஸ்தான் பொறுப்பு என்று நேற்று மரண விசாரணை அதிகாரி ரோஸி பைநூன் அளித்திருந்த தீர்ப்பை சுட்டிக் காட்டி, இந்த விவகாரத்தில் அரசாங்கம் என்ன குருடாகி விட்டதா அல்லது திறமையற்றதாகி விட்டதா அல்லது இரண்டுமா என்று மலேசிய நேர்மை அமைச்சுக்கு பொறுப்பான பால் லவ்வை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கேட்டார்.

கடந்த ஜனவரி 23, 2013 இல் காஜாங்கில் ஒரு பொது இடத்தில் 39 வயதான சி. சுகுமாரை போலீஸ் கைது செய்தனர். சுகுமாரனை மருத்துவமனைக்கு அனுப்பத் தவறியதன் மூலம் போலீசார் அவர்களது சட்டப்பூர்வமான கடமையிலிருந்து தவறி விட்டனர் என்று கரோனர் அவரது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த அதிர்ச்சி அளிக்கும் மரணம் ஏற்பட்டிருக்கவே கூடாது. ஈராண்டுகளுக்கு முன்பு லோரி ஓட்டுனரான சந்திரன் பெருமாளுக்கு ஏற்பட்ட மரணம் போலீசாரின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்பதை கரோனர் உறுதிப்படுத்தியிருந்ததையும் குலசேகரன் சுட்டிக் காட்டினார்.

அதிகரித்துக் கொண்டு போகும் தடுப்புக்காவல் கைதிகளின் மரணத்தை பார்க்கையில் அரசாங்கதில் ஏதோ ஒரு பெரும் குறைபாடு இருப்பது தெளிவாகிறது.

ஜூன் 2013 இல், மலேசிய அரசாங்கத்தில் நேர்மை மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் பால் லவ் சிறைக் கம்பிகளுக்குப் 1 paulபின்னால் நடக்கும் அவக்கேடுகளை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று உறுதியளித்தார்.

“இந்த அச்சமளிக்கும் புள்ளிவிபரங்கள் குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையடைந்துள்ளது என்று நான் உங்களுக்கு உறுதி கூற முடியும். ஏதாவது செய்தாக வேண்டும்.

“அங்கு என்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்காதீர்கள். இதனை நிறுத்துவதற்கு அரசாங்க நடைமுறை ஒரு வழியைக் காண வேண்டிய தேவையுள்ளது” என்று அந்த அமைச்சர் கூறியிருந்தார்.

அமைச்சர் பால் லவ்வின் வாக்குறுதி என்னவாயிற்று? அதிகமான தடுப்புக்காவல் மரணங்கள்!

என்ன, அரசாங்கம் குருடாகி விட்டதா அல்லது திறமையற்றதாகி விட்டதா அல்லது இரண்டுமா என்று அமைச்சர் பால் லவ்வை கேட்கிறார் குலசேகரன்.

மரணம் வெறும் புள்ளிவிபரம் பற்றியதல்ல. தடுப்புக்காவல் மரணம் அன்றாட வழக்கமாகி விடக்கூடாது என்று குலா அறிவுறுத்தினார்.

ஸைனுடியன் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்த போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்படுவதில் இனிமேலும் தாமதம் இருக்கக்கூடாது என்பதை குலசேகரன் அவரது அறிக்கையில் வலியுறுத்தினார்.