நேற்று கோலாலும்பூரில் நடந்த மாபெரும் கித்தா லவான் பேரணி உள்பட, பேரணிகள் அமைதியாகவே நடந்துவந்துள்ள வேளையில் பேரணித் தலைவர்கள்மீது போலீஸ் விசாரணை நடத்துவது அதிகாரமீறலாகும் என பிகேஆர் சாடியுள்ளது.
நேற்று, 10,000 பேர் கலந்துகொண்ட பேரணி எவ்வித அசம்பாவிதமுமின்றிக் கலைந்து சென்ற பின்னர் போலீசார் இரவு மணி 7.45க்கு கிளானா ஜெயா பிகேஆர் தொகுதித் தலைவர் சைபுல்லா சுல்கிப்ளியைக் கைது செய்தனர்.
நேற்றைய பேரணியும் அதற்குமுன் நடந்த பேரணிகளும் வன்முறை ஏதுமின்றி அமைதியாகவே நடந்து முடிந்துள்ளன என்பதால் போலீசார் சைபுல்லாமீதோ மற்ற பிகேஆர் தலைவர்கள்மீதோ நடவடிக்கை எடுக்கக் காரணம் ஏதுமில்லை என பிகேஆர் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன் கூறினார்.
“அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் அமைதியாக நடந்துள்ள பேரணியில் கலந்துகொண்டவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியாது.
“ஆனால், போலீசார் சட்டத்தைத் திரித்து குற்றவியல் சட்டத்தின் பொருத்தமற்ற விதிகளைப் பயன்படுத்தி கைது செய்யவும் விசாரணை செய்யவும் முனைகின்றனர்”, என்றாரவர்.