சிலாங்கூர் அரசுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையிலான நீர் உடன்பாடு கைவிடப்பட்டிருப்பதை அறிந்து பல என்ஜிஓ-கள் ஆத்திரமடைந்துள்ளன.
இரு அரசுகள் மீண்டும் பேச்சுகளுக்குத் திரும்பி சிலாங்கூர் நீர் விநியோகத் தொழிலைச் சீரமைக்கும் பணியை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என அவை கேட்டுக்கொண்டன.
“சிலாங்கூர் நீர் தொழில் சீரமைப்புக்காக இரு அரசாங்கங்களும் ஏழாண்டுகளாகக் கடுமையாகப் பாடுபட்டு வந்துள்ள வேளையில் இப்போது மேலும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….
“சிலாங்கூர், கோலாலும்பூர் மக்களின் அடிப்படை உரிமையைப் பணையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. நடக்கும் அபத்தங்களைக் கண்டு வெறுப்படைகிறோம்”, என அத்தரப்பினர் ஒரு கூட்டறிக்கையில் கூறி இருந்தன.
அந்த அறிக்கையை மலேசிய நீர், எரிபொருள் பயனீட்டாளர் சங்கம் (வீகேம்), மலேசிய பயனீட்டாளர் சங்கக் கூட்டமைப்பு (ஃபோம்கா), போரம் ஆயர் மலேசியா ஆகியவை வெளியிட்டிருந்தன.