சிலாங்கூர் அரசுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையிலான நீர் உடன்பாடு கைவிடப்பட்ட விவகாரத்தில், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதைவிட அரசியல் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கூறும் அரசியல் ஆய்வாளர்கள், அஸ்மின் அலியை மந்திரி புசாராகக் கொண்ட மாநில அரசு மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாக தெரியவில்லை என்கிறார்கள். அது கூட்டரசு அரசாங்கத்துடன் அரசியல் ஆடுவதில்தான் அக்கறை காட்டுகிறதாம்.
அந்த வகையில் முன்னைய மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூட்டரசு அரசாங்கத்துடன் செய்துகொண்ட எந்த ஏற்பாட்டையும் பக்காத்தான் அரசு ஏற்கப்போவதில்லை என அவர்கள் கருதுகிறார்கள்.
யுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்) சட்ட, அரசாங்க, அனைத்துலகக் கல்விக் கல்லூரி தலைவர் முகம்மட் அஸிசுடின் முகம்மட் சனி, அஸ்மினின் முடிவு சிலாங்கூர் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை என்றார்.
“அதை இரத்துச் செய்வது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றவர் நினைத்திருக்கலாம்.
“ஆனால், சிலாங்கூர் முன்பு கடுமையான நீர் பிரச்னைகளை எதிர்நோக்கியதை நாம் அறிவோம். அவரும் அதை அறிந்தே இருப்பார் என்றே நம்புகிறேன். ஆனால், அதற்கு மாற்றுத் தீர்வுகள் அவரிடம் உள்ளனவா என்பது எனக்குத் தெரியாது”, என்றவர் பெர்னாவிடம் கூறினார்.
“முன்னாள் மந்திரி புசார், கூட்டரசு அரசாங்கத்துடன் நட்பு பாராட்டி சிலாங்கூர் மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முயன்றார். ஆனால், அஸ்மினின் செயல்கள் பக்கத்தானுக்குத்தான் பாதகமாக அமையும்”, என முகம்மட் அஸிசுடின் தெரிவித்தார்.
பக்கத்தான், அதிலும் குறிப்பாக பிகேஆர், காலிட் அவரது ஆட்சியில் செய்ததையெல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் இருப்பதால் அஸ்மினின் செயலும் எதிர்பார்க்கப்பட்டதே என யுயுஎம்-மின் இன்னொரு விரிவுரையாளரான பேராசிரியர் அஸிஸுல் சனி கூறினார்.
“பக்கத்தான் காலிட்டின் கொள்கைகளை ஏற்பதில்லை. அதனால் முந்தைய நிர்வாகம் செய்தவற்றையெல்லாம் மாற்றப் பார்க்கிறது.
“காலிட்டின் முன்னாள் சிறப்பு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை, கிடெக்ஸ் இரத்து, இப்போது நீர் உடன்பாடு….இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள்”. பதவிக்கு வந்தவுடனேயே இவற்றையெல்லாம் மாற்ற அஸ்மின் அவசரம் காட்டுகிறார் என அஸிஸுல் கூறினார்.
தாங்கள் எடுக்கும் முடிவுகள் சிலாங்கூர் மக்களைப் பாதிக்காது என்று பக்கத்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறது போல் தெரிகிறது. ஆனால், நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அப்போது அதன் எதிர்மறை விளைவுகள் தெரிய வரும் என்றாரவர்.
-பெர்னாமா
செயல் அறிந்து பேசுங்கள் கொச்சி வார்த்தைகளை பயன் படுதாதிர் பொன் ரங்கன்…………………..
நூத்துக்கு நூறு உண்மை நிலவரம் இதுதான்.மக்கள் தான் பலிகடா.சாக்கடை அரசியல்.