ஹுடுட்டைவிட வெள்ளப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையே பெரும்பாலான மலாய்க்காரர்கள் விரும்புகிறார்கள்

hududஇவ்வாரம்  திருத்தப்பட்ட  ஹுடுட்  சட்டவரைவைத்  தாக்கல்  செய்ய  கிளந்தான்  பாஸ்  கட்சி  காட்டும்  முனைப்பு  மலாய்க்காரர்களிடையே   அவ்வளவாக  வரவேற்பைப்  பெறவில்லை.

அதன்மீது  ஒரு  ஆய்வை  நடத்திய  மெர்டேகா  மையம், அவ்வாய்வு,  பாஸ்  வழிநடத்தும்  கிளந்தான்  அரசு,  கடந்த  ஆண்டு  வெள்ளத்தால்  ஏற்பட்ட  பேரழிவைத்  தொடர்ந்து  மாநிலத்தைச்  சீரமைக்கும்  பணிகளுக்கே  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என்பதைக்  காட்டுவதாக  தெரிவித்தது.

“ஹுடுட்  சட்டத்தில்  திருத்தம்  செய்து  தாக்கல்  செய்யும்  கிளந்தான்  அரசின்  முடிவால்  மாநில  ஆளும்  கட்சியின்  செல்வாக்கு  கிளந்தான்  மக்களிடமோ  நாடு  முழுவதுமுள்ள  முஸ்லிம்  வாக்காளரிடமோ  உயரவில்லை  என்பதே  எங்கள்  கருத்து.

“இது,  2004-இல்  ‘இஸ்லாமிய  அரசு’ என்ற  தேர்தல்  கொள்கையை  வைத்து  போட்டியிட்டபோது  அக்கட்சியிடமிருந்து  திரெங்கானு  மாநிலம்  பறிபோனதையும்  கிளந்தானையும்  கிட்டத்தட்ட  இழக்கும்  நிலை  ஏற்பட்டதையும்  நினைவுபடுத்துகிறது”, என மெர்டேகா  மையம்  கூறிற்று.

பக்கத்தான்  ரக்யாட் எதிர்ப்புத்  தெரிவித்த  போதிலும்  பாஸ்  கிளந்தான்  திருத்தப்பட்ட  ஹுடுட்  சட்டவரைவை  எதிர்வரும்  புதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்வதில்  மும்முரம்  காட்டுகிறது.

மெர்டேகா  மையம்  ஜனவரியில்  நடத்திய  ஆய்வில்  1008  பேர்  கலந்து  கொண்டனர். அவர்களில்  60 விழுக்காட்டினர்  மலாய்க்காரர்கள்.

மலாய்க்காரர்களில்  11 விழுக்காட்டினர்தான்  ஹுடுட்டின்  உடனடி  அமலாக்கத்துக்கு  ஆதரவு  தெரிவித்தனர்.

84 விழுக்காட்டினர்  ஹுடுட்டைவிட  வெள்ள  நிவாரணப்  பணிகளுக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதையே  வரவேற்றனர்.