ரபிஸி: யார் பிரதமராக வந்தாலும் திருப்தி அடைய மாட்டார் மகாதிர்

superiorமுன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்   முகம்மட்‘உயர்வு மனப்பான்மை’ நோயால்  பீடிக்கப்பட்டிருக்கிறார்.  அதனால்தான் அவருக்குப்  பின்  பிரதமராக  வந்த  எவரையும்  அவர்  அப்பதவிக்குத்  தகுதி  படைத்தவராக  நினைப்பதில்லை   என்கிறார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி.

“மகாதிர்  உயர்வு மனப்பான்மையால்  அவதியுறுகிறார்.  பிரதமராகும்  தகுதி  தமக்கு  மட்டுமே  இருப்பதாக  அவர்  நினைக்கிறார்.

“கடந்த  காலத்தை  நினைத்துப் பார்த்தால்  அவர்  என்ன  செய்ய  முயல்கிறார்  என்பது  தெளிவாக  தெரியும். நஜிப்பைப்  பிரதமர்  பதவியிலிருந்து  அகற்றப்  பார்க்கிறார்”, என  ரபிஸி மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அப்துல்லா  அஹமட்  படாவியைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்க  நினைத்தபோது  என்ன  செய்தாரோ  அதைத்தான்   மகாதிர் இப்போதும்  செய்கிறார். நஜிப்மீதும்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்மீதும்  அவர்  தாக்குதல்  தொடுப்பதை  ரபிஸி  சுட்டிக்காட்டினார்.

“மகாதிர்  ஒரு  பிரதமரைத்  தூக்க  விரும்பினால்,  ஒன்றிரண்டு  விவகாரங்களை  வைத்துத்  தாக்குவார்.  அதன்பின்னர்  அவருக்கு  ஆதரவளிப்பதை  நிறுத்துவார். அதுவும்  பலனளிக்கவில்லை  என்றால்  அம்னோவை  விட்டு  விலகுவதாகக்  கூறுவார்”, என்றவர்  குறிப்பிட்டார்.