பிடிபட்டவர்களிடம் கித்தா லவான் பேரணிக்கு நிதியளிப்பவர்கள் பற்றித் தெரிந்துகொள்ள போலீசார் விரும்பினர்

avtiveகித்தா  லவான்  பேரணியில்  கலந்துகொண்டதற்காகக்  கைதான  சமூக  ஆர்வலர்கள்  இருவரிடம்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பற்றியும் பேரணிக்கு  நிதி  எங்கிருந்து  கிடைக்கிறது  என்றும்  விசாரிக்கப்பட்டது.

தம்மிடமும்  சக  சமூக  ஆர்வலரான  ஆடம்  அலியிடமும்  நடத்தப்பட்ட  விசாரணையில்  அந்த நோக்கம்  தெளிவாக  தெரிந்தது  என்று  மந்திப்  சிங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“பேரணி  ஏற்பாட்டாளர்கள் யார், அதற்கு  நிதி  எங்கிருந்து  வருகிறது  எனக்  கேட்டனர்”, என்றாரவர்.

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம் சிறைவைக்கப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பதற்காக  நடைபெற்ற  பேரணியில்  கலந்துகொண்டதற்காக  மந்திப்பும்  ஆடமும்  சனிக்கிழமை  கைது  செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை  கைது  செய்யப்பட்டாலும்  நேற்றுத்தான்  போலீஸ்  அவர்களிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்தது.

விசாரணை  செய்யப்படும்வரை  தூங்குவதும்  சாப்பிடுவதுமாக  பொழுது  கழிந்தது  என  ஆடம்  கூறினார்.

அவர்களைக்  கைது  செய்ததில்  அதிகாரம்  தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என  அவர்களின்  வழக்குரைஞர்  மெலிஸ்ஸா  சசிதரன்  கூறினார்.   விசாரணை  செய்வதைவிட  தண்டிப்பதே  அவர்களின்  நோக்கமாகும்  என்றாரவர்.