ஹுடுட் சட்டவரைவை நஜிப் தடுப்பாரா?

najநேற்று நாடாளுமன்றத்தில்  பிஎன் பங்காளிக்கட்சிகளின்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்தித்தபோது  அங்கு   விவாதிக்கப்பட்ட  முக்கியமான  விவகாரங்களில்  ஹுடுட்  சட்டவரைவும்  ஒன்று.

ஹுடுட்  கூட்டரசு  அரசமைப்புக்கு  எதிரானது  என்பதில்  தலைவர்கள்  ஒருமித்த  கருத்தைக்  கண்டதாக  தெரிகிறது.

“இந்த  ஒருமித்த  கருத்தை  நஜிப்பும்  ஏற்றுக்கொண்டார்”, எனப்  பங்காளிக்கட்சி  ஒன்றின்  தலைவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

இந்த  ஒருமித்த  கருத்து  என்பதை  எப்படி  வேண்டுமானாலும்  அர்த்தப்படுத்திக்  கொள்ளலாம். பக்கத்தான்  ரக்யாட்டிலும்கூட  ஒருமித்த  கருத்து  என்றுதான்  கூறிக்  கொண்டிருந்தார்கள். ஆனால், பாஸ்  தன்மூப்பாக  ஹுடுட் சட்டத்தைக்  கொண்டுவந்ததை  அடுத்து  அந்தக்  கூட்டணி  உடைந்து  போய்க்  கிடக்கிறது.

இன்னொரு  பிஎன் பங்காளிக்கட்சித்  தலைவர்- அவரும்  தம்  பெயரை  வெளியிட  வேண்டாம்  என்று  கேட்டுக்கொண்டார்-  நஜிப்  ஒருமித்த  கருத்தை  ஏற்றுக்கொண்டதே  அவர்  ஹுடுட்  சட்டத்தின்  அமலாக்கத்தை  அனுமதிக்க  மாட்டார்  என்பதற்கு  உத்தரவாதமாகும்  என்றார்.

பிரதமர்  தம்  நிலைப்பாட்டை  விளக்கி  விரைவில்  அறிக்கை  வெளியிட  ஒப்புக்கொண்டிருப்பதாகவும்  அவர்கள்  தெரிவித்தனர்.

பிஎன்  தலைவரான  நஜிப்,  பிஎன்  பங்காளிக்  கட்சிகளையும்  திருப்திப்படுத்த  வேண்டும்  அதேவேளை  பிஎன்  பங்காளிக்கட்சிகளின்  விருப்பத்துக்கு  மாறான  நிலைப்பாட்டைக்  கொண்டுள்ள  அம்னோவையும்  திருப்திப்படுத்த  வேண்டும்.

பாஸ், ஹுடுட்  சட்ட  அமலாக்கத்துக்கு நாடாளுமன்ற  ஒப்புதலைப்  பெற  தனி  உறுப்பினர் சட்டவரைவை  நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்தொடரில்  கொண்டுவர  ஆவன  செய்து  வருகிறது.

நஜிப்  பங்காளிக்  கட்சிகளின்  நெருக்குதலுக்கு  இடங்  கொடுப்பவராக  இருந்தால்  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  தொடர்பில்  எதுவும்  செய்யாமல்  சும்மா  இருந்து  விடலாம்.  வழக்கமாக  தனி  உறுப்பினர்  சட்டவரைவுக்கு  அரசாங்கத்தின்  சட்டவரைவுகளுக்குப்  பின்னேதான்   இடம்  ஒதுக்கப்படும். அரசாங்கத்தின் சட்டவரைவுகளின்  நீண்ட  வரிசைக்குப்பின்  அது  விவாதத்துக்கு  வராமலேயேகூட  போகலாம்.

அப்படி  அவர்  அம்னோவின்  கோரிக்கைகளுக்கு  விட்டுக்கொடுத்துப் போவாராயின்  அந்தச்  சட்டவரைவு  நாடாளுமன்றத்தின்  நடப்புக்  கூட்டத்  தொடரிலோ  அடுத்த  கூட்டத்திலோ  வாக்கெடுப்புக்கு  வந்துதான்  தீரும்.

அப்படி  வந்தால்  இரண்டு  கூட்டணிகளுக்குமே  அது  இக்கட்டான  நிலையை  உருவாக்கி  முஸ்லிம் கட்சிகளுக்கும்  முஸ்லிம்-அல்லாத  கட்சிகளுக்குமிடையில்  உறவுகள்  நலிவடைய  காரணமாகி விடலாம்.

நஜிப், அம்னோவை  அதன்போக்கில்  வாக்களிக்க  அனுமதித்து  கெராக்கானும்  மசீசவும்  ஹுடுட்  அரசமைப்புக்கு  எதிரானது  என்று  தொடுத்துள்ள  வழக்கின் முடிவுக்குக்  காத்திருக்கலாம்.

நஜிப்பால் ஹுடுட்டை  ஒட்டுமொத்தமாக  நிராகரித்து விடவும்  முடியாது. அப்படிச்  செய்தால் முஸ்லிம்  வாக்காளர்களை  இழக்கும்  நிலை  உருவாகும்.

முடிவில்,  எப்பக்கமும்  சாராமல்   நடுநிலையாக   நடந்துகொள்ள  நஜிப்  முற்பட்டாலும்   அம்னோவின்  உணர்வுகளுக்குத்தான்  அவர்  முக்கியத்துவம்  கொடுக்க வேண்டி  இருக்கும். ஏனென்றால்,  அவர்  பிரதமராக  இருப்பதை  உறுதிப்படுத்துவது  அக்கட்சிதானே.