நேற்று கிளந்தான் மாநில சட்டமன்றம் ஹூடுட் சட்டத்தை இயற்றிது. அச்செயல் அந்த மாநிலம் மலேசிய அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.
மலேசிய அரசமைப்புச் சட்டம் சமயச் சார்பற்றது. அச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அம்மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு கூறுகிறார்.
“ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு (II) (1993) 2015 சட்டம் மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் சமயச் சார்பற்ற கட்டமைப்புக்கு முரணானதாக இருக்கிறது.
” (அது) ஓர் இஸ்லாமிய சமய ஆட்சி முறையை அல்லது முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் சட்டத்தின் முன் வேறுபடுத்தி நடத்துவதற்கு வகை செய்யும் ஓர் இணையான கிரிமினல் நீதிமுறை அமைவை உருவாக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை”, என்று திரு அவரது அறிக்கையில் தெளிவுபடுத்துகிறார்.
மலேசியாவை உருவாக்கியவர்கள் அரசமைப்புச் சட்டத்தை வரையும் போது அது போன்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.
ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு, அரசமைப்புச் சட்டம் மற்றும் இதர பெடரல் சட்டங்களுக்கு இடையில் ஏற்பட்ட பல்வேறு மோதல்களைச் சுட்டிக் காட்டிய திரு, கிளந்தான் ஹுடுட் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்றார்.
கிளந்தான் சட்டமன்றம் அரசமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அது இயற்றியுள்ள ஷரியா சட்டத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுக்கொள்வதாக திரு கூறினார்.