மசீச இளைஞர்கள்: மகாதிரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எங்கே?

chongபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைசொல்வதில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  எல்லைமீறிச்  சென்று  விட்டதாக  மசீச  இளைஞர்  தலைவர்  சோங்  சின்  வூன்  கூறினார்.

நஜிப்  தம்மீது  சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகளுக்கு  விளக்கமளிக்காததால்  அவருக்கு  மக்களின்  ஆதரவு  குறைந்து  விட்டதாக  மகாதிர்  கூறுவது  பற்றிக்  கருத்துரைத்த  சோங், அதைப்  புள்ளிவிவரங்களுடன்  நிரூபிக்க  முடியுமா  என வினவினார்.

நஜிப்பின்  தலைமைத்துவத்தில்  காஜாங்,  தெலோக் இந்தான்  இடைத்  தேர்தல்களில் பிஎன்  குறிப்பிடத்தக்க  முன்னேற்றம்  அடைந்ததாக  அவர்  கூறினார்.

“நஜிப்  கடுமையாகப்  பாடுபட்டு  வருகிறார், அவருக்கு ஒரு  வாய்ப்பு கொடுக்க  வேண்டும்”, என்று  கூறியவர்  நஜிப்புக்கு  பிஎன்னின்  ஆதரவு  என்றும்  உண்டு  என்றார்.

மேலும், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் பற்றியும்  புதிய  ஜெட்  விமானம்  வாங்கியது  பற்றியும்  தம் குடும்பத்தாரின்  வாழ்க்கைமுறை பற்றியும்  மங்கோலிய  பெண்  அல்டான்துன்யா  கொலை  பற்றியும்  நஜிப்  அடிக்கடி  விளக்கம்  கூற வேண்டிய  அவசியமில்லை  என்றும்  அவர்  சொன்னார்.

“அவர்  பல  தடவை  அவை  பற்றி  விளக்கம்  அளித்து  விட்டார். பிரதமர்  என்ற  முறையில்  அவர்  நாட்டை  நிர்வகிக்க  வேண்டுமே  தவிர  ஒவ்வொரு  நாளும்  இந்த  விவகாரங்களுக்குப்  பதில்  சொல்லிக்  கொண்டிருக்கக்  கூடாது”, என்றார்.