கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா சட்டம் வேண்டுமென்றால், மலேசிய அரசமைப்புச் சட்டம் பற்றி மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்

Sabahsarawakrenegotiateபாஸ் கட்சி ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா கிரிமினல் சட்டம் இருந்தே ஆகவேண்டும் என்றால், பெடரல் அரசமைப்புச் சட்டம்  பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சாபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த 33 அரசு சார்பற்ற அமைப்புகள் கீழ்க்கண்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன:

நாங்கள் – சாபாகான்களும் சரவாக்கியர்களும் – இதன் மூலம் வேண்டிக்கொள்வது: கிளந்தான் மாநிலம் அதன் ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II (1993) 2015 ஐ அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினால், பெடரல் அரசமைப்புச் சட்டம் பற்றி முழுமையான  மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

 

நாங்கள் பெருமிதத்துடன் கீழ்க்கண்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்:

 

1. மலாயா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் 1963 ஆம் ஆண்டு மலேசியாவை உருவாக்குகையில், சாபாவும் சரவாக்கும் ஒரு சமயச் சார்பற்ற கூட்டமைப்புக்கு கையொப்பமிட்டனவே தவிர கூட்டமைப்பின் எந்த ஒரு பகுதியிலும் எந்த சமய கிரிமினல் நீதி அமைவுமுறை அமலில் இருப்பதற்கு வகைசெய்யும் ஒரு சமய சார்புடைய கூட்டமைப்புக்கு அல்ல.

 

2. மலேசியா தோற்றுவிக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தையில் சாபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் முக்கியமான கோரிக்கைகளில் சமய சுதந்திரம் ஒன்றாகும். இப்பேச்சுவார்த்தையின் வழி அரசாங்கங்களுக்கிடையிலான குழு அறிக்கையும், இறுதியில் 1963 ஆம் ஆண்டு மலேசியா ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் ஷரியா கிரிமினல் சட்டம் ஓர் அம்சமாக இருந்திருந்தால், சாபாவும் சரவாக்கும் மலேசியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்காது.

 

3. பெடரல் நீதிபரிபாலனத்தின் ஒரு பகுதியாக குற்றங்கள் மீதான சமய சார்பற்ற நீதி அமைவுமுறை அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் பல அம்சங்கள் அடங்கிய ஒரு முழுமையான அரசமைப்பு கட்டாக உள்ளடக்கம் பெற்றுள்ளது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதேனும் அடிப்படை மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு பெடரல் அரசமைப்புச் சட்டம் முழுமையாக மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிறது.

 

4. சாபாகான்களும் சரவாக்கியர்களும் கிளந்தான் ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II (1993) 2015 இன் சட்டப்பூர்வமான பங்காளர்கள் என்றால், இச்சட்டம் அமலாக்கம் காணும் போது, கீழ்க்கண்ட விளைவுகள் அவற்றில் அடங்கும்:

i) சாபாகான்களும் சரவாக்கியர்களும், சமயத்தை பொருட்படுத்தாமல், முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் திருடுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் மற்றும் உடல் சார்ந்த தீங்குகள் போன்றவற்றுக்கு ஆளாக்கப்பட்டால், அவர்களின் வழக்குகள் ஷரியா நீதிமன்றத்தில் நடத்தப்படும், பொதுச்சட்ட நீதிமன்றத்தில் அல்ல. [கிரிமினல் சட்டத் தொகுப்பு செக்சன் 2]

ii) சாபாகான்களுக்கும் சரவாக்கியர்களுக்கும், அவர்கள் முஸ்லிம்-அல்லாதவர்களாக, மகளிர்களாக, வயது குறைந்த முஸ்லிம்களாக, அல்லது சமய நடத்தையில் கேள்விக்குரிய முஸ்லிம்களாக இருந்தால், ஷரியா நீதிமன்றத்தில் முழுமையாக சாட்சியம் அளிக்கும் தகுதி இல்லை. [கிரிமினல் சட்டத் தொகுப்பின் செக்சன் 41, மற்றும் ஷரியா நீதிமன்றம் கிளந்தான் சாட்சியம் சட்டம் 2002 இன் செக்சன்கள் 83 மற்றும் 86]

iii) சாபாகான் மற்றும் சரவாக்கிய முஸ்லிம்கள் 4.45 கிராம் தங்கத்தின் மதிப்பிற்கு (தற்போதைய விலையின்படி சுமார் ரிம620) கூடுதலான எந்த ஒரு பொருளைத் திருடியதாக அல்லது கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் ஷரியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர் மற்றும் தண்டணையாக உடலின் பாகம் துண்டிக்கப்படுவதை எதிர்கொள்வர். [கிரிமினல் சட்டத் தொகுப்பின் செக்சன்கள் 6-11].

(iv) சாபகான் மற்றும் சரவாக்கிய முஸ்லிம்கள் கிளந்தானில் கள்ள உறவு அல்லது குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் கல்லால் அடித்து கொல்லப்படும் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். [கிரிமினல் சட்டத் தொகுப்பு செக்சன்கள் 12-15].

(v) சாபாகான் மற்றும் சரவாக்கிய முஸ்லிம்கள் கிளந்தானில் மதுபானம் அருந்தியதற்காக குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் 40 லிருந்து 80 வரையிலான கசையடிகளை எதிர்கொள்ள வேண்டும். [கிரிமினல் சட்டத் தொகுப்பு செக்சன் 22].

(vi) சாபாகான் மற்றும் சரவாக்கிய முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதத்திற்கு எதிரானக் கொள்கை கொண்டிருந்ததற்காக [irtidad or riddah]  குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் மரணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் தண்டணையை எதிர்கொள்வர். [கிரிமினல் சட்டத் தொகுப்பு செக்சன் 23].

(vii) சாபாகான்கள் மற்றும் சரவாக்கியர்கள் ஆகியோரை கொலை செய்தவர்கள் அரசு தரப்பு வழக்குரைஞர் இரண்டு நல்ல, வயது வந்த ஆண் முஸ்லிம்களின் சாட்சியங்களை முன்வைக்கவில்லை என்றால், மரண தண்டனையிலிருந்து தப்பி விடுவார்கள்.

 

5. கிளந்தான் ஷரியா கிரிமினல் சட்டத்தை அமல்படுத்துவதில் எழும் மிக முக்கியனான பிரச்சனை ஜனநாயகம் பற்றியது அல்ல, அது இறைமை பற்றியது. புருனை ஒரு ஜனநாயாக நாடாக இல்லாவிட்டாலும் ஓர் இறைமையுடைய நாடு என்ற முறையில் அது ஷரியா கிரிமினல் சட்டத்தை அமல்படுத்தலாம். பொதுமக்கள் முன்னதாக கூர்ந்து ஆய்வு செய்வதிலிருந்து மறைக்கப்படாமல் அந்தக் கிரிமினல் சட்டத் தொகுப்பு ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த கிரிமினல் சட்டத் தொகுப்பை அமல்படுத்தும்  அரசமைப்புச் சட்டப்படியான தகுதி கிளந்தானுக்கு கிடையாது, ஏனென்றால் புருனையை போல் கிளந்தான் இறைமையுடைய நாடல்ல. ஆகவே, சாபாவும் சரவாக்கும் கிரிமினல் சட்டத் தொகுப்புக்குத் தெரிவிக்கும் ஆட்சேபம் கிளந்தானின் ஜனநாயக குறிக்கோளை மீறியதல்ல.

 

6. கிளாந்தானுக்கு அரசாங்க மசோதா அல்லது தனிபட்ட உறுப்பினர் மசோதா மூலமாக பிரிவு 76A இன் கீழ் கிரிமினல் நீதி சம்பந்தமாக அதிகாரம் அளித்தால் – அது 1965 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்திற்கு ஏதிரான ஓர் அரசமைப்புச் சட்டப் புரட்சியாகும், அது பிரிவினைவாத ஆதரிப்புக்குச் சமமானதாகும். 9 ஆவது அட்டவணையைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை இருக்க வேண்டிய தேவையை தவிர்ப்பதின் மூலம், பிரிவு 76A இன் கீழ் வரும் மசோதா கிழக்கு மலேசியாவின் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தடுத்து நிறுத்தும் செயல்திறம் முடக்கப்படுகிறது. சாபாவும் சரவாக்கும் மலாயாவின் சமபங்காளிகள் என்ற தகுதியை திட்டவட்டமாக அகற்றுவதோடு மட்டுமில்லாமல் அது சாபாவையும் சரவாக்கையும் அரசமைப்புச் சட்டப்படி மலாயாவின் மாநிலங்கள் ஒன்றின் தகுதியை விட தாழ்ந்த நிலையில் வைக்கிறது.

 

7. கிளந்தான் அதன் ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பை அமலாக்கம் செய்ய வலியுறுத்துமானால், அதன் விளைவாக மலேசியாவுக்கு ஒரு புதிய பெடரல் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டியது அவசியமாகிறது. மலேசியா ஒரு தேசம் என்ற நெறிமுறை அடிப்படையைச் சிதைத்துவிடக் கூடிய அரசமைப்புச் சட்ட நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய பெடரல் அரசமைப்புச் சட்டம் வரைவது குறித்து ஆழ்ந்து ஆராய்வதற்கு மாநில மற்றும் பெடரல் அளவிலான சட்டம் இயற்றுபவர்கள்  மற்றும் ஆட்சித்துறையினர் பங்கேற்கும் ஒரு மலேசிய உச்சநிலை மாநாடு நடத்துமாறு நாங்கள் பெடரல் அரசாங்கம் அல்லது சாபா மற்றும் சரவாக் மாநில அரசாங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம், கிளந்தான் அதன் சொந்த கிரிமினல் நீதி அமைவுமுறையைக் கொண்டிருக்கையில் சாபாவும் சரவாக்கும் இதர உரிமைகளைப் பெற்றிருக்க முடியும்.

 

Endorsed by the following Organisations of Sabah and Sarawak:

1. Archdiocesan Human Development Commission (AHDC) Kota Kinabalu, Sabah,
2. Baramkini,
3. Belia Saint Aloysius Limbanak, Sabah,
4. Borneo’s Plight in Malaysia Foundation (BoPiM),
5. Borneo Resources Institute Malaysia, Sarawak (Brimas),
6. Consumer Association And Protection Sabah (CAPS),
7. Cornerstone Resources Berhad, Sabah,
8. Damn the Dams, Sarawak,
9. Gerakan Anak Sarawak (Gasak),
10. Institute for Development of Alternative Living (Ideal),
11. Jaringan Orang Asal SeMalaysia (JOAS),
12. Jaringan Tanah Hak Adat Bangsa Asal Sarawak (Tahabas),
13. Komiti Belia Perlaksana Child of Jesus, Sabah,
14. Komiti Belia Perlaksana Minintod, Sabah,
15. Land, Empowerment, Animal, People (Leap), Sabah,
16. Malaysian Trades Union Congress (MTUC), Sabah Division,
17. Northern Green Youth, Sarawak,
18. Pacos Trust, Sabah,
19. People’s Green Coalition, Sarawak,
20. Pusat Sumber Adat dan Mediasi Kaum Anak Negeri Sabah (Pusaka),
21. Rise Of Sarawak Efforts (Rose),
22. Sabah Banking Employees’ Union,
23. Sabah Environmental Protection Association (Sepa),
24. Sabah Women’s Action Resource Group (Sawo),
25. Saccess Sarawak,
26. SALT Movement,
27. Sarawak Dayak Indigenous Association (Sadia),
28. Sarawak Women for Women Society (SWWS),
29. Save Rivers Sarawak,
30. Sembang-Sembang Forum, Sarawak,
31. St Marcellinus Church, Minintod, Sabah,
32. St Theresa Child of Jesus Church, Sabah,
33. Tim Pelayanan Belia Paroki Penampang, Sabah.