மஸ்லான்: ரோலெக்ஸ் நமக்குக் கட்டுப்படியாகாது

rolexநிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான் எந்தக் காலத்திலும்  ரோலெக்ஸ் கடிகாரம்  அணிந்ததில்லையாம். அது தமக்குக்  கட்டுப்படி  ஆகாது  என்றாரவர்.

“நான்  ரோலெக்ஸ் வைத்திருந்ததில்லை. அணிந்ததும்  இல்லை. ரோலேக்ஸ்  வாங்கும்  அளவுக்கு  என்னிடம்  பணமில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அவர்  ரிம30,000-திலிருந்து ரிம40,000  வரை மதிப்புள்ள  ரோலேக்ஸ்  சப்மெரினர்  கடிகாரம்  அணிந்திருக்கக்  காணப்பட்டதாகக்   குற்றச்செயல்களை  எதிர்க்கும்  சமூக  ஆர்வலர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்  கூறியிருப்பதற்கு  மஸ்லான்  இவ்வாறு  பதில்  அளித்தார்.

சஞ்சீவன்  கடந்த  சனிக்கிழமை  முகநூலில் அரசியல்வாதிகளும்  அரசாங்க  உயர்  அதிகாரிகளும்  உயர்விலை  கொண்ட  கடிகாரங்கள்  அணிந்திருக்கும்  படங்களை  வெளியிட்டிருந்ததுடன்  கடிகாரங்களின்  பெயர்களையும்  அவற்றின்  விலைகளையும்  குறிப்பிட்டிருந்தார்.

தம்மிடம்  இரண்டே  கடிகாரங்கள்  மட்டுமே  இருப்பதாக   அஹமட்  மஸ்லான்  கூறினார். ஒன்று  ஓரியெண்ட்; மற்றது  ஸ்வாட்ச்.

ஓரியெண்ட்  கடிகாரத்தின்  மதிப்பு ரிம800.  நண்பர்  ஒருவர்  கடந்த  ஆண்டு  பிறந்த  நாள்  பரிசாகக்  கொடுத்தது. ஸ்வாட்ச்  கடிகாரம்  ரிம230-க்கு  அவரே  வாங்கியது.

“ரோலெக்ஸ்  கடிகாரம்  இருப்பதுபோல் படத்தை  வெட்டி  ஒட்டி  இருக்கலாம். இப்படிப் போலி  படங்களைப்  போட்டதற்காக  என்னால்  வழக்கு  தொடுக்க  முடியும். பார்ப்போம்”, என்றாரவர்.