பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), தேச நிந்தனை (திருத்த) சட்டம் போன்ற முக்கியமான சட்டவரைவுகளை விவாதிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படுவது அவசியம் என மலேசிய செனட்டர்கள் மன்றத் தலைவர் அப்துல் ரஹிம் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“என் கருத்தைக் கேட்டால் இப்படிப்பட்ட முக்கியமான சட்டவரைவுகள் முறையாக விவாதிக்கப்பட வேண்டும். அதற்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
சர்ச்சைக்குரிய அச்சட்டவரைவுகள் மக்களவையில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது சரியா என்று வினவப்பட்டதற்கு அப்துல் ரஹிம் அவ்வாறு சொன்னார்.
அதேவேளை பொடா சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கத்தையும் மக்களவையையும் அவர் தற்காத்துப் பேசினார். ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலின் மிரட்டல் அதிகரித்து வருவதால் அது தேவைதான் என்றாரவர்.