சிங்கப்பூரில் உள்ளது போன்ற மதுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைப் பின்பற்றாத அரசாங்கத்தை பாஸ் கடுமையாக சாடியுள்ளது.
“மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியா, சிங்கப்பூர் அரசாங்கம் இரவு மணி 10.30 திலிருந்து மறுநாள் காலை 7 மணிவரை மது அருந்துவதைத் தடை செய்யும் புதிய சட்டமொன்றைக் கொண்டு வந்திருப்பதைக் கண்டு வெட்கப்பட வேண்டும்.
“14 விழுக்காடு மலாய்க்காரர்களையும் 14.9 விழுக்காடு முஸ்லிம்களையும் கொண்ட சிங்கப்பூரால் இது போன்ற சட்டத்தை நிறைவேற்றவும் அமல்படுத்தவும் முடிகிறதென்றால் மலேசியாவாலும் அதைச் செய்ய முடியும் சொல்லப்போனால் இன்னும் அதிகமாகவே செய்ய முடியும்”, என பாஸ் உலாமா மத்திய செயல்குழுத் தலைவர் முகம்மட் கைருடின் அமான் ரசாலி அல்-தக்ரி ஓர் அறிக்கையில் கூறினார்.
மது- தொடர்பான பிரச்னைகளை புத்ரா ஜெயா கடுமையானவையாகக் கருத வேண்டும் என கோலா நெருஸ் எம்பி-யான கைருடின் கூறினார். அனைத்துலகப் புள்ளிவிவரங்களின்படி மலேசியா மதுவுக்காக ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய $500 மில்லியன் (ரிம1.5 பில்லியன்) செலவிடுவதாக அவர் சொன்னார்.

























