செம்பாகாவை எளிதாக வென்ற பாஸ் இப்போது ரொம்பினைக் குறி வைக்கிறது

tuan-ibrசெம்பகா  இடைத்  தேர்தலில்  அம்னோ  போட்டிபோடாமல்  பாஸுக்கு  விட்டுக்கொடுத்திருக்கலாம்  ஆனால்,  ரொம்பினில்  பாஸ்  விட்டுக்  கொடுக்காது.

அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க  வேண்டிய  அவசியமில்லை  என்று   பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்  கூறினார்.

“ஏனென்றால்  அம்னோவால் வழிநடத்தப்படும்  பிஎன்  அரசாங்கம் பொருள், சேவை  வரியைக்  கொண்டுவந்து  மக்களுக்குச்  சிரமத்தைக்  கொடுத்திருக்கிறது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

பகாங்  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப், காலஞ்சென்ற  ஜமாலுடின்  ஜர்ஜிஸுக்கு  மரியாதை தெரிவிக்கும்  வகையில்   பாஸ்  ரொம்பினில்  போட்டி  போடக்  கூடாது  என்று  நேற்று  கேட்டுக்கொண்டிருந்தார். அதன்வழி  இரு  கட்சிகளும்  காலத்தையும்  பணத்தையும்  சக்தியையும்  மிச்சப்படுத்தலாம்  என்றாரவர்.

நிக் அசீஸ்  நிக்  மாட்டின்  இறப்பை  அடுத்து  அவருக்கு  மரியாதை  தெரிவித்து  செம்பகாவில்  இடைத்  தேர்தலில்  அம்னோ  போட்டி  போடாததை  அவர்  சுட்டிக்காட்டினார்.

அட்னான்  முன்வைத்த  காரணங்களை  துவான்  இப்ராகிம்  புறந்தள்ளினார்.

“அப்படியானால், அம்னோ  பெர்மாத்தாங்  பாவை  பிகேஆருக்கு  விட்டுக்  கொடுக்குமா”, என்று  அவர்  வினவினார்.