போலீஸ் ராஜ்யமாகிறதோ என மகாதிர் கவலை

mhகுறைசொல்வோருக்கும்  எதிர்ப்புக்  காட்டுவோருக்கும்  எதிரான  போலீஸ்  நடவடிக்கையைப்  பார்த்து  மலேசியா  போலீஸ்  ராஜ்யமாக  மாறுகிறதோ  என்று  கவலையுறுகிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

பதிவர்கள்  முன்னாள்  பிரதமரை   நேர்காணல்  கண்டு  பதிவேற்றம்  செய்த  யுடியுப்  காணொளி  ஒன்றில், தி எட்ஜ்  ஊடக  குழுமத்தின் செய்தியாளர்கள்  கைது  செய்யப்பட்டதை  மகாதிர்  கண்டித்தார்.

“தி எட்ஜ்  செய்தியாளர்கள்  நிந்தனைக் கருத்துகள்  சொன்னதாகக் கூறிக்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்கள். அது  அதிகாரத்தைச்  சரியாக  பயன்படுத்துவது  ஆகாது.

“அவரை(நஜிப்)க்  கேட்டால்  நான்  செய்யவில்லை, போலீஸ்தான்  செய்தது  என்பார்.

“போலீஸ்  வருவதும்  கைது  செய்வதுமான  போலீஸ்  ராஜ்யம் அமைவதை நாம்  விரும்பவில்லை. மாஜிஸ்திரேட்கூட  விசாரணைக்காக  தடுத்து  வைக்கும்  ஆணையை  வெளியிட  மறுத்து  விட்டார்”, என  மகாதிர் கூறினார்.

மார்ச் 30-இல்,  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்தின்கீழ்  செயல்படும்  மலேசியன்  இன்சைடர்  செய்தித்தளத்தைச் சேர்ந்த  மூன்று  செய்தியாளர்கள்  ஆட்சியாளர்கள்  மாநாடு  ஹுடுட்டை  நிராகரித்தது என்று  செய்தி  வெளியிட்டதற்காகக்  கைது  செய்யப்பட்டனர்.

ஒரு  நாள் இரவு  முழுக்க  அவர்களைப்  பிடித்து வைத்திருந்த  போலீஸ், மறுநாள்  அவர்களை  விசாரணைக்காகத்  தடுத்து  வைக்க  நீதிமன்ற  ஆணையைப்  பெற  முயன்றது  ஆனால்,  முடியவில்லை.