எம்ஏசிசி: ரோஸ்மாமீதே விசாரணை நடத்தியவர்கள், எதற்கும் அஞ்சோம்

rosmahதான்  ஒரு காகித  புலி  அல்ல  என்பதை  வலியுறுத்தும்  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  விசாரணை  என்று  வந்து  விட்டால்  வேண்டியவர்  வேண்டாதவர்  எனப்  பாகுபாடு  காட்டுவதில்லை   என்கிறது.

இதற்கு  எடுத்துக்காட்டாக,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா மன்சூர்  ரிம24.4 மில்லியன்  வைர மோதிரம்  வாங்கியதாக  எதிரணியினர் கூறிக்  கொண்டிருந்ததைக்  கூட  தாங்கள்  விசாரித்ததாக  எம்ஏசிசி  தலைவர்  அபு  காசிம்  முகம்மட் கூறினார்.

அது  பற்றி  ஆணையத்திடம்  புகார்  செய்யப்பட்டவுடன்  அதன்மீது  புலனாய்வு  செய்யுமாறு  தாமே  அதிகாரிகளைப்  பணித்ததாக  அபு காசிம்  கூறினார்.

நஜிப்பிடம்  அவர்  மனைவிதான்  அந்த  மோதிரத்தை  வாங்கினாரா  என்றும்  அவர்  வினவி  இருக்கிறார்.

அதற்கடுத்த  நாள் அதிகாரிகள்  சுங்கத் துறைக்குச்  சென்று  விசாரித்தார்கள். மோதிரம்  நியு  யோர்க்குக்குத்  திருப்பி  அனுப்பட்டதாக  அங்கு  உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

“இதை இப்போதுதான்  முதன்முறையாக  தெரிவிக்கிறேன்”, என்றாரவர்.

“பிரதமரின்  துணைவியார்மீதே  விசாரணை  நடத்திய  நாங்கள்  வேறு எதைக்  கண்டும்  அஞ்சுவோமா?”, என்று  அபு  காசிம்  வினவியதாக  சின் சியு  டெய்லி  கூறிற்று.