விரைவு ரயில் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது

railசிங்கப்பூரும் கோலாலும்பூருக்குமிடையில் 2020-இல்  கட்டி  முடிப்பதாக  இருந்த  அதிவேக ரயில்  திட்டத்தைத்  தள்ளிவைக்க  முடிவு  செய்யப்பட்டுள்ளது. அது சிக்கல்மிக்க  திட்டம்  என்பதால்  இம்முடிவு  எடுக்கப்பட்டதாக  இரு  நாட்டுப்  பிரதமர்களும்  அறிவித்தனர்.

ஆண்டு  இறுதிக்குள்  ஓர்  உடன்பாட்டுக்கு  வந்து  ரயில்  திட்டத்தை  கட்டி  முடிக்கும்  புதிய காலவரிசையை  அறிவிக்க  முடியும்  என   அவர்கள்  நினைக்கிறார்கள்.

“முதலில்  திட்டமிடப்பட்டிருந்த  காலவரிசையான  2020-ஐ  ஆராய்ந்து  பார்த்ததில்  அது  சாத்தியமற்றது எனத் தோன்றியது”, என  சிங்கப்பூர்  பிரதமர்  லீ ஹிசியான்  லூங்  கூறினார்.

மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், மலேசியத்  தலைநகருக்கும்  சிங்கப்பூருக்குமிடையில்  ரயில்  தொடர்பைக்  கட்டி  முடிக்க  ஐந்தாண்டுகள்  ஆகும்  என்றும்  அதை  வடிவமைக்க  ஓராண்டும் குத்தகை  அழைப்புக்கு  மேலும்  ஓராண்டும்  ஆகும்  என்றார்.

“அதிவேக  ரயில்  திட்டம்  தொடர்பான  இரு தரப்பு  விவகாரங்களுக்கும்  ஆண்டு  இறுதிக்குள்  முடிவு  காணத்  தீர்மானித்திருகிறோம்”, என்று  நஜிப்  குறிப்பிட்டார்.

அதிவேக  ரயிலால்  கோலாலும்பூருக்கும்  சிங்கப்பூருக்குமிடையிலான  பயண  நேரம்  90 நிமிடமாகக்  குறையும்.

இப்போது  கோலாலும்பூரிலிருந்து சிங்கப்பூர்  சாலைவழி  செல்ல  நான்கு  மணி  நேரம்  ஆகிறது

2013-இல் அதிவேக  ரயில்  திட்டம்  பற்றி  அறிவித்தபோது  அது 2020-இல்  கட்டி  முடிக்கப்படும்  என  சிங்கப்பூரும்  மலேசியாவும்  அறிவித்திருந்தன.