‘ரொம்பினை வைத்து நஜிப் ஆட்சிமீது வாக்காளர்களின் உணர்வுகளை மதிப்பிட முடியாது’

saifulரொம்பின்  இடைத்  தேர்தல்  முடிவுகளை  வைத்து பரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  நிர்வாகத்தைப்  பிடித்தாட்டும்  விவகாரங்கள் வாக்காளர்  உணர்வுகளில்  தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளதாக  முடிவு  செய்துவிட  இயலாது.

பிஎன்னின்  பெரும்பான்மை  குறைந்தது  உண்மைதான். அதற்கு  வாக்காளர்கள்  குறைந்த  எண்ணிக்கையில் வாக்களிக்க  வந்தது  ஒரு  காரணமாக  இருக்கலாம்  என ஜனநாயக, பொருளாதார விவகாரக்  கழகத்தின்  தலைமை  செயல்  அதிகாரி (சிஇஓ) வான்  சைபுல்  வான்  ஜான்  கூறினார். அவரது  கூற்றை  பினாங்குக்  கழகத்தின்  வொங்  சின்  ஹுவாட்டும்  ஒப்புக்கொண்டார்.

வாக்காளர்  உணர்வுகளை எடைபோட,  பிஎன்னுக்கும்  பக்கத்தான்  ரக்யாட்டுக்கும்  வெற்றி  வாய்ப்பு  சமமாக  உள்ள தொகுதிதான்  பொருத்தமான  இடமாக  இருக்கும்  என  வான்  சைபுல்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அந்த  உணர்வை  மதிப்பிட  ரொம்பின்  பொருத்தமான  இடமல்ல. அது  எப்போதுமே  பிஎன்னுக்குப் பாதுகாப்பான ஒரு  தொகுதியாக  இருந்து  வந்துள்ளது. அதனால்  நஜிப்புக்கு  எதிராக   ஆத்திரம்  இருந்தால்கூட  அது  ரொம்பின் போன்ற  இடத்தில்  தெளிவாகத்  தெரியாது.

“அந்த உணர்வை மதிப்பிட  50-50 வெற்றிவாய்ப்புள்ள  ஒரு தொகுதியே  பொருத்தமாக  இருக்கும்”, என்றார்.

இன்னொரு  புறம்,  முஸ்லிம்-அல்லாதார்  இன்னமும்  பாஸ் கட்சியை  நம்புகிறார்களா  என்பதற்கும்  இந்த  இடைத்  தேர்தல்  ஒரு  சோதனையாக  அமைந்தது  என  வான் சைபுல்  கூறினார்.

“இப்போதைக்கு  பாஸ்மீதான  நம்பிக்கை  குறைந்துள்ளது  எனத் தாராளமாக  அனுமானிக்கலாம்”, என்றாரவர்.