அமெரிக்காவில் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார் பால் புவா

phuaஉலகக்  கிண்ணக்  கால்பந்தாட்டப்  போட்டியின்போது  லாஸ்  வேகாஸில் சட்டவிரோதமாக  பந்தயம்  கட்டும் கட்டமைப்பை  நடத்தியதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  மலேசியரான  பால்  புவா  குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார்.

அவ்வழக்கில்  அரசாங்கத் தரப்பு  ஆதாரங்களை  நீதிபதி  ஏற்க  மறுத்து  வழக்கைத்  தள்ளுபடி  செய்தார். அதே  குற்றம்  சுமத்தப்பட்டிருந்த  புவாவின்  மகனும்  மற்றவர்களும்  சிறுகுற்றம்  புரிந்ததை  ஒப்புக்கொண்டதால்  அமெரிக்காவை  விட்டு  வெளியேற  அனுமதிக்கப்பட்டனர்.

ஆடம்பர  தங்குவிடுதிகள், சுரங்கத் தொழில்  போன்றவற்றை  நடத்திவருபவரும்  போக்கர்  ஆட்டங்களில்  பெரும்  பந்தயம்  கட்டி  ஆடுவதில்  விருப்பமுள்ளவருமான  புவா, 50, சீசர்ஸ்  பேலஸில்  ஆசிய  ஆண்கள், பெண்கள்  அடங்கிய  ஒரு  கும்பலுடன்  கைது  செய்யப்பட்டார்.

அமெரிக்க  எஃப்பிஐ  அதிகாரிகள்  கைதாணை  இல்லாமல்  பழுதுப்பார்ப்பவர்கள்போல்  புவா  தங்கியிருந்த  அறைக்குள்  நுழைந்திருக்கிறார்கள். அதைக் காரணம்காட்டி  யுஎஸ்  மாவட்ட நீதிபதி  எண்ட்ரு  கோர்டன்  வழக்கை  நேற்று  தள்ளுபடி  செய்தார். புவாவின்  கடப்பிதழையும்  அவரது  யுஎஸ்$48 மில்லியன்  ஜெட்  விமானத்தையும்  திருப்பிக்  கொடுக்குமாறும்  அவர்  உத்தரவிட்டார்.