போரின் அறிகுறியாக, துணைப் பிரதமரை வரவேற்க கேஎல்ஐஏ-இல் பெருங் கூட்டம் திரளுமா?

battle1எம்டிபி விவகாரத்தில்  தம்முடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள்  பதவி  விலகலாம்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியதை  அடுத்து  இப்போது  கவனம் துணைப்  பிரதமர்  முகைதின் யாசின் பக்கம்  திரும்பியுள்ளது.

முகைதின்  கடன்  தொல்லைகள்  நிரம்பிய  1எம்டிபி  பற்றி  நஜிப்புடன் மாறுபட்ட  கருத்தைக்   கொண்டவர். ஆகக்  கடைசியாக  அம்னோ  கூட்டமொன்றில்  பேசியபோதுகூட  அதைப்  பற்றிய  தம்  கருத்தை  அவர்  வெளியிட்டிருந்தார்.

இரகசியமாக  நடந்த  அக்கூட்டத்தில்  முகைதின்  பேசியதெல்லாம்  ஒளிப்பதிவு  செய்யப்பட்டு  இணையத்தில்  பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.

அதில்  துணைப்  பிரதமர்  1எம்டிபி  இயக்குனர்கள்  நீக்கப்பட்டு  அவர்கள்மீது  விசாரணை  நடத்தப்பட  வேண்டும்  என்றார்.

நஜிப்பிடம்  அதைத்  தெரிவித்ததாகவும்  எதுவும் நடக்கவில்லை  என்றும்  அவர்  ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

துணைப்  பிரதமர்  மே 26-இலிருந்து  விடுப்பில்  சென்று  விட்டார். கடந்த  வெள்ளிக்கிழமை  நஜிப்  தம்முடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள்  பதவி  விலகலாம்  என்று  கூறிய  அமைச்சரவைக்  கூட்டத்திலும்  அவர்  கலந்துகொள்ளவில்லை.

வெளிநாடு  சென்ற   முகைதின்  இன்று  நாடு  திரும்புகிறார். அவருக்குக்  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  “பெரிய  வரவேற்பு”  காத்திருக்கும்  என  அரசியல்  ஆய்வாளர்  ஷாபுடின் ஹுசேன்  எதிர்பார்க்கிறார்.

“முகைதின்  திரும்பி  வருவது  ஒரு  பெரிய  நிகழ்வு. பலரும்  வருவார்கள், குறிப்பாக  அம்னோ  உறுப்பினர்கள். அவரின்  உண்மையான  நிலைப்பாட்டைத்  தெரிந்துகொள்ள  அவர்கள்  ஆர்வமாக  இருப்பார்கள்.

“அவர்  திரும்பி  வரும்  செய்தியும்  மக்களை  விமான  நிலையத்துக்கு  வருமாறு  அழைக்கும்  செய்தியும்  சமூக வலைத்தளங்களில்  வலம்  வந்து  கொண்டிருக்கின்றன.

“அம்னோவையும்   பிஎன்னையும்  பாதுக்காக்கக்  கூடியவர்  என்று  கருதப்படும்  ஒரு  தலைவரை  வரவேற்கப்  பெருங்  கூட்டத்தைக்  கவர  சுவரொட்டிகளும்  உருவாக்கப்பட்டுள்ளன”, என்றவர்  அவரது  வலைப்பக்கத்தில்  கூறினார்.

நஜிப்  எதிர்ப்பு  இயக்கமொன்று  செயல்பட்டுக்  கொண்டிருப்பதால்
முகைதினை  வரவேற்க  பெருங்  கூட்டம்  திரளும்  வாய்ப்பு  இருக்கவே  செய்கிறது  என  அவ்வாய்வாளர்  கருதுகிறார்.

“முகைதின்  விமான  நிலையத்தில்  முக்கிய  அறிவிப்பு  எதையும்  விடுப்பாரா? அம்னோ  போராட்டத்தில்  ஒரு  புதிய  அத்தியாயம்  தொடங்குமா?

“எத்தனை  அமைச்சர்களுக்கு, துணை  அமைச்சர்களுக்கு  முகைதினை  வரவேற்கும்  துணிச்சல்  இருக்கும்?”,  என்றெல்லாம் ஷாபுடின்  வினவுகிறார்.

துணைப்  பிரதமர்  இன்றிரவு  9 மணிக்கு நாடு  திரும்புவார்  எனத்  தெரிகிறது.