நாளை மகாதிர்-நஜிப் நேருக்கு நேர் மோதல் நிகழுமா?

showdownநாளை பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அவரின்   குருவாக  இருந்து  எதிரியாக  மாறியுள்ள  டாக்டர்  மகாதிர்  முகமட்டை நேருக்கு  நேர்  சந்திப்பாரா?

கடந்த  செவ்வாய்க்கிழமை, வழக்குரைஞர்களைக்  கொண்ட  என்ஜிஓ-வான  சுகாகுவாம் சமூக  அமைப்புகள்  நஜிப்பைச்  சந்தித்துப்  பேச  2-மணி  நேர  கலந்துரையாடலுக்கு  ஏற்பாடு  செய்திருப்பதாகக்  கூறியிருந்தது.

அதில் கேள்வி-பதில்  அங்கமும்  உண்டு.  ‘ஒளிப்பதற்கு  ஒன்றுமில்லை’  என்பது  அதன்  தலைப்பு  என  சுகாகுவாம்  தலைவர்  கைருல் அன்வார்  ரஹ்மாட்  கூறினார். அந்நிகழ்வில்  கலந்துகொள்வதை  நஜிப்பும்  உறுதிப்படுத்தி விட்டாராம்.

நஜிப்பிடம்  1எம்டிபி, அவரது  சொத்து  விவரம் என்று  எதைப்  பற்றியும்  வினவலாம்  என  கைருல்  கூறினார். சுகாகுவாம் மகாதிருக்கும்  அழைப்பு  அனுப்பும்  என்றாரவர்.

“இது ஒரு பொதுவான  நிகழ்வு. மகாதிர்  வந்தால்  அவரை  நாங்கள்  வரவேற்போம். இன்னும்  அவருக்கு  அழைப்பு  கிடைக்கவில்லை  என்றால்  நானே  அவரை  அழைப்பேன்”, என்றாரவர்.

நேற்று  மகாதிரிடம்  இது  பற்றி  வினவியதற்கு, “எனக்குத்  தெரியாது. இதுவரை  அழைப்பு  இல்லை”, என்றார்.

ஆனால், முன்னாள்  பிரதமரின்  உதவியாளர்  ஒருவர்  மகாதிர்  கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்  “சாத்தியம் நிறைய உண்டு”  என்று  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.