தம்மைக் கண்டு யாருமே பயப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை 1எம்டிபி மீதான “ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை” என்ற கலந்துரையாடலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வரத்தவறியதை அடுத்து மகாதிர் இவ்வாறு கூறினார்.
“நான் ஒரு சாதாரண மனிதன். என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை. என்னால் யாருக்கும் எதுவும், எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
“என்னைக் கண்டு எதற்காக பயப்பட வேண்டும்? நீங்கள் எல்லாம் பயப்படவில்லையே” எனச் செய்தியாளர்களை நோக்கி மகாதிர் கேட்டார்.
மகாதிர் ஒரு என்ஜிஓ-வின் பிரதிநிதியாகத்தான் அக்கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். ஆனால், நஜிப் வராததால் கூட்டம் பொறுமையிழந்ததைத் தொடர்ந்து அவரே மேடையேறிப் பேச வேண்டியதாயிற்று.
உடனே நஜிப்பை இடித்துரைக்கத் தவறவில்லை.
“நான் நினைக்கிறேன், மக்களைச் சந்திப்பதைவிடவும் முக்கியமான அதிகாரத்துவ பணி அவருக்கு வந்துவிட்டதுபோலும்”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, முன்னாள் பத்து கவான் அம்னோ தொகுதித் தலைவர் கையருடின் அபு ஹசான், கலந்துரையாடலுக்கு வராத நஜிப்பை “ஒரு கோழை” என்று வருணித்தார்.
“விளக்கமளிக்கக் கிடைத்த வாய்ப்பை நஜிப் தவறவிட்டார்…நஜிப் ‘பெனாகுட்(கோழை)’”, என்றாரவர்.


























அடிமேல் அடியும் இடிமேல் இடியும் வீழ்ந்தால் யார்தான் பயப்படமாட்டார்கள்??? உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டால்??? ஓடுறே ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டமாதிரிதான் பிரதமரின் நிலை!!!!