துணைப் பிரதமர் முகைதின் யாசினையும் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டாலையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்க்குத்தான் ஆபத்தாக முடியும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
“நஜிப் முகைதினையும் ஷாபியையும் விலக்குவது அவர் தமக்குத் தாமே எதிர்ப்பை உருவாக்கிக்கொள்வதாக அமையும். அவ்விருவரும், வேறு வழியின்றி மகாதிருடன் சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள்”, என அரசியல் ஆய்வாளர் கூ கேய் பெங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளில் செல்வாக்கு மிக்கவர் மகாதிராகத்தான் இருப்பார். மலாய் வாக்காளரிடையே (முன்னாள் எதிரணித் தலைவர்) அன்வார் இப்ராகிமைவிடவும் மகாதிருக்குச் செல்வாக்கு அதிகம்”, என்றாரவர்.
மெர்டேகா மைய இயக்குனர் இப்ராகிம் சுபியானும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் பயனடைகிறவர் மகாதிராகத்தான் இருப்பார் என்றவர் சொன்னார்.
“நிலைமை 1998போல் அவ்வளவு மோசமாக இருக்காது. ஆனாலும், பலர் மகாதிர் பக்கம் சேர, அவரது அணி வளர்ந்து பெரிதாகும்”, என இப்ராகிம் கூறினார்.
ஆனால், நடப்புத் தலைவர்களில் யாருக்கும் அன்வார் செய்ததுபோல் கட்சியைப் பிளவுபடுத்தும் ஆற்றலோ துணிச்சலோ கிடையாது என்பதால் 1998-இல் ரிபோர்மாசி காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெரிய எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் சொன்னார்.
அம்னோ உதவித் தலைவரான ஷாபியை ஓரங்கட்டினானால் நஜிப் சாபாவின் ஆதரவை இழக்கும் அபாயமும் இருக்கிறது.
“ஜோகூர், சாபா இரண்டுமே அம்னோவுக்கு முக்கியமான மாநிலங்கள்”, என்றார் கூ. அவ்விருவரையும் விலக்குவது அவ்விரண்டு மாநிலங்களிலும் அம்னோவுக்கு ஆபத்தாக முடிந்து விடும்.
“தீவகற்ப மலேசியாவில் நிலையான ஆதரவு இல்லை என்பதால் நஜிப்புக்கு சாபா, சரவாக்கின் ஆதரவு மிகவும் தேவை”, என்று கூ குறிப்பிட்டார்.
நல்ல தருணம் வரும்வரையில் விலக்கவும் மாட்டார் விலகவும் மாட்டார் நஜிப்.!!!! பதவி போனபின் சிறைவாசம் என்றால், அப்பப்பா!!! … யாருக்குத்தான் வேண்டும்????