பாஸிலிருந்து ஒரு புதிய கட்சி: சாத்தியம் உண்டா?

harapnஒரு  புதிய  அரசியல் கட்சியை  அமைப்பதே  சிரமம். அதிலும் ஒரு கட்சியிலிருந்து  பிரிந்து  சென்று  இன்னொரு கட்சியை  அமைப்பது  இன்னும்  சிரமமானது. மலேசியாவில்  பிரிந்து  சென்ற  கட்சிகள்  அரசியல்  சிதைவுகளாகிப்  போன  கதை  நிறைய  உண்டு,

தெங்கு  ரசாலி  ஹம்சாவின்  செமாங்காட் 46  எட்டாண்டுகள்தான்  தாக்குப்  பிடித்தது. அதன்பின்னர்  அம்னோவில்  சேர்ந்து  கொண்டது. பாஸிலிருந்து  பிரிந்து  சென்ற  பெர்ஜாசா, ஹமிம்  ஆகியவை  மங்கி  மறைந்து  போயின.

அந்த  அடிப்படையில்,  பாஸ்  முக்தாமாரில்  தோற்றுப்போன முற்போக்காளர்கள் தனிக்கட்சி  அமைப்பதைவிட  பிகேஆர்  அல்லது டிஏபி-இல்  சேர்வது  எளிதாக  இருக்கும்  என  பாஸ் ஹராபான்  பாரு (புதிய  நம்பிக்கை)   செயலாளர்  சுல்கிப்ளி  அஹமட்  கூறினார்.

“டிஏபியில்  அல்லது  பிகேஆரில்  சேர்வதே  எளிதுபோல்  தோன்றுகிறது.  புதிய கட்சியை  அமைப்பதில்  உள்ள  தலைவலி எல்லாம்  இருக்காது. புதிய  கட்சியை  உருவாக்குவது  கெட்ட  கனவாகக்கூட  மாறிவிடலாம்”, என்றவர்  சொன்னார்.

புதிய  நம்பிக்கை, ஜி18  என்ற  பெயரிலும்  இது  அழைக்கப்படுகிறது,  இப்போது  ஓர்  இயக்கமாக  மட்டுமே  உள்ளது.

ஓர்  அரசியல்  இயக்கத்திலிருந்து  அரசியல்  கட்சியாக  அது  உருமாறுவது  அடிநிலை  உறுப்பினர்களின்  பின்னூட்டத்தைப்  பொருத்துள்ளது  என்று  அவர்  சொன்னார்.

“அவர்கள்  நடப்பு  பாஸுக்கு மாற்றுக் கட்சி ஒன்று  தேவை  என்றும் அது டிஏபி, பிகேஆர்  ஆகியவற்றுடன்  கூட்டுச்  சேரும் இஸ்லாமியக்  கட்சியாக  இருக்க  வேண்டும் என்றும்  நினைத்தால் நாங்கள்  பிரிந்துசென்று அவ்விரு  கட்சிகளிலும்  சேர  முடியாது”, என்றவர்  வலியுறுத்தினார்.

முன்னாள்  பாஸ்  சட்டப்  பிரிவுத்  தலைவர்  ஹனிபா  மைடின், பிகேஆர்,  டிஏபி  ஆகிய  கட்சிகளின்  அரசியல்  கொள்கைகள்  வெவ்வேறானவை  என்பதால்  அவற்றில்  சேர்வதை  பாஸ்  உறுப்பினர்கள்  வரவேற்க  மாட்டார்கள்  என்றார்.

“வெவ்வேறு  மக்களிடம்  வெவ்வேறு கொள்கைகள்  இருக்கும். அவர்கள்  டிஏபி, பிகேஆருடன்  ஒத்துழைக்கலாம். ஆனால், அவற்றின்  கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை”, என்றாரவர்.

ஹனிபாவுடன்  ஒத்துப்போகும்  அரசியல்  ஆய்வாளர்  சைபுல்  வான்   ஜான்,  முற்போக்காளர்கள்  பிகேஆர்  அல்லது  டிஏபி-இல்  சேர்ந்தால் நிலவரம் கலவரமாகும்  என்றார்.

“அவ்விரு  கட்சிகளுடன்  இணைவது  சரிப்படாது. அவ்விரு  கட்சிகளின்  இயங்குநிலையும்  பாதிப்படையும். 18 பேர்   பதவிகள்  தேவை  என  வந்து  நின்றால்  அவற்றின்  நிலை  என்னவாகும்”, என்றவர்  வினவினார்.

பாஸ்  முற்போக்காளர்கள்  அமைக்கும்  கட்சி தொடர்ந்து  நிலைத்திருக்க  வேண்டுமானால் அது  ஒரு  பிரிந்து  சென்ற  கட்சி  என்ற  அடையாளத்தை  விட்டொழிக்க  வேண்டும்  என்று  வான்  சைபுல்  கூறினார்.

“பிரிந்து  சென்ற  கட்சி  அல்லது எதிர்ப்புக் கட்சி  என்றிருந்தால்  அவர்களின்  போராட்டம்  நீடிக்காது. அவர்கள்  புதிய  நம்பிக்கையையும்  பேரார்வத்தையும்  கொடுத்தால்  நீண்ட காலம்  நிலைத்திருக்கலாம்”, என்றாரவர்.

புதிய  கட்சி  பற்றிய  விவரங்கள்  அதிகம்  தெரியவில்லை  என்றாலும்  அது  எல்லாச்  சமயத்தவருக்கும்  இடமளிக்கும்  கட்சியாக.  நீதியை  நிலைநிறுத்தவும்  ஊழலை  ஒழிக்கவும்  போராடும்  கட்சியாக   இருக்க  விரும்புகிறது.

‘அனவருக்குமான  பாஸ்’  என்ற  சுலோகம்  மக்களிடையே  சலனத்தை  உண்டு  பண்ணியுள்ளது.

இந்தக்  கருத்து  முஸ்லிம்- அல்லாத  எதிரணி  ஆதரவாளர்களிடம்தான்  அதிக வரவேற்பைப்  பெற்றிருப்பதுபோல்  தெரிகிறது.

அரசாங்கத்தை  மாற்ற  வேண்டுமென்றால்  இஸ்லாமிய  வாக்கு  வங்கி  தேவை  என்று  அவர்கள்  நினைப்பதுதான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  பினாங்குக்  கழகத்தைச்  சேர்ந்த  வொங்  சின்  ஹுவாட்.

“முஸ்லிம்- அல்லாதார்  புதிய  எதிரணிக்  கூட்டணியில்  முஸ்லிம்  வாக்காளர்களும் இடம்பெற்றிருப்பதைக்  காண  விரும்புகிறார்கள். அவர்களுக்கு  பாஸிடம் (இப்போது) நம்பிக்கை  இல்லை. பாஸுக்குப்  பதிலாக ஒரு  கட்சி வருவதை  அவர்கள்  விரும்புகிறார்கள்”, என்றாரவர்.

மலாய்  முஸ்லிம்களைப்  பொருத்தவரை, இது  மலாய்  வாக்குகளை மேலும்  சிதறடிக்கும்,  மேலும்  போட்டியை  உருவாக்கும் என  அவர்கள்  நினைப்பதாக  அந்த  ஆய்வாளர்  கூறினர்.

.