புவா: மாரா, 1எம்டிபி, டிஎச் ஆகியவை ‘குறைந்தவிலையில்’ சொத்து வாங்கியதாகக் கூறுவது பொய்

pua2மாரா, 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி), தாபோங்  ஹாஜி(டிஎச்) ஆகிய  மூன்றுமே சொத்துகள்  வாங்கியதைப்  பற்றிக்  குறிப்பிடும்போது  அவற்றைக்  குறைந்த விலைக்கு  வாங்கியதாக தம்பட்டம்  அடித்துக்  கொள்கின்றன.

குறைந்த  விலை  என்று  அவர்கள் கூறிக்கொள்வது “பொய்”, “பித்தலாட்டம்”  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

“ஜிஎல்சி  நிர்வாகிகளைக்  குற்றச்செயல்களிலிருந்து  விடுவிக்கும்  முயற்சியாக சொத்துகள் குறைந்த  விலைக்கு  வாங்கப்பட்டதாகக்  கூறிக்கொள்வது  வெறும்  பித்தலாட்டம்.

“அதன்(ஆஸ்திரேலியாவில் மாரா வாங்கிய  சொத்து)  விலை உண்மையில் ரிம71 மில்லியன்  என்றால், விற்பவர்  எதற்காக  அவ்வளவு  குறைவான  விலையில்  விற்க  வேண்டும்; விற்ற  பின்னர் வாங்கியவருக்கு  எதற்காகக்  கையூட்டும்  கொடுக்க  வேண்டும்?

“விற்பனையாளர்  மடையரா அல்லது வியக்க  வைக்கும்  அளவுக்கு  இரக்கக்  குணம்  படைத்தவரா?”, என  புவா  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

அதேபோல்  பூலாவ்  இண்டாவில் Tadmax Resources பெர்ஹாட்டிடமிருந்து  சதுர  அடிக்கு ரிம55 என  மதிப்பிடப்பட்ட  நிலத்தைக்  குறைந்த  விலைக்கு  வாங்கியதாக  1எம்டிபி  கூறிக்கொள்வதையும்  அபத்தம்  என  புவார் வருணித்தார்.

“அந்த  நிலத்தின்  மதிப்பு  சதுர அடிக்கு  ரிம55  என்றால்  நிதிச் சிக்கலில்  சிக்கிக்  கொண்டிருந்த  Tadmax எதற்காக  அதைச்  சதுர  அடிக்கு ரிம21.80க்கு  விற்க  வேண்டும்?”

டிஎச்  விற்கத்  தயார், வாங்குவோரைத்தான் காணோம்

தாபோங்  ஹாஜி  தலைவர்  அப்துல்  அஜீஸ்  அப்துல்  ரஹிம்  கோலாலும்பூர்  துன் ரசாக்  இணைப்பு  மையத்தில் யாத்திரிகர்  நிதியம்  வாங்கிய  நிலத்தை இப்போதுகூட  ரிம5 மில்லியன்  ஆதாயத்துக்கு  எளிதாக  விற்று  விடலாம்  என்று   கூறியிருப்பதையும்  வெறும்  பீற்றல்  எனச்  சாடினார்  புவா.

“விரைவில் ரிம5 மில்லியன்  ஆதாயம்  காணலாம்  என்பது  கேட்பதற்கு  நல்லா  இருக்கிறது. ஆனால், (வாங்குவதற்கு  ஆர்வம்  இருப்பதாக)  அறிவிக்கப்பட்டு  பல  வாரங்கள்  கடந்து விட்டன.

“வாங்குவதற்கு  எவரும்  முன்வந்திருப்பதாக தெரியவில்லை.

“அப்துல்  அஜீஸ்  சும்மா  பீற்றிக்  கொண்டிருக்கிறார்.

“அந்தச்  சொத்தை  வாங்குவதற்கு  ஆள்கள்  இருப்பது  தெரிந்தால் 1எம்டிபி அவர்களிடமே  விற்றிருக்குமே”, என்றாரவர்..