யயாசான் பெட்ரியோட் நெகாரா மலேசியா(ஒய்பிஎன்) விற்பனை செய்யும் கார்களுக்கான எண்பட்டைகளின் வழி கிடைக்கும் ஆதாயத்திலிருந்து ரிம1 மில்லியன் மட்டும் சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)க்கு வழங்கப்படும்.
அந்த விற்பனை மூலமாக ஒய்பிஎன்-னுக்கு ரிம10 மில்லியனுக்குமேல் ஆதாயம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிம1மில்லியன் என்பது அதில் சிறு பகுதிதான்.
“ஜேபிஜே-க்கு ரிம1மில்லியன் கொடுப்போம். ஜேபிஜே-க்கு இதனால் ஒன்றும் நட்டமில்லை. பார்க்கப்போனால், அதற்கும் இலாபம்தான்”, என ஒய்பிஎன் உதவித் தலைவர் நட்ஸிம் ஜொஹான் கூறினார்.
ஹிஷாமுடின் உசேன் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இந்த பெட்ரியோட் எண்பட்டை விற்பனைத் திட்டம், டெண்டருக்கு விடப்படாமல் ஒய்பிஎன்னுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அம்னோவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளின் காரணமாகத்தான் அந்த வேலை ஒய்பிஎன்னுக்குக் கிடைத்தது என்று கூறப்படுவதை அதன் தலைவர் (ஆர்) பிரிகேடியர்-ஜெனரல் ஹுசேய்னி ஹஷிம் மறுத்தார்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆகியோரை வேண்டுமானாலும் விசாரித்துப் பாருங்கள், இந்தத் திட்டத்தை எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோமா என்று.
“நான் எதையும் ஒளிக்கவில்லை”, என்று கூறிய ஹுசேய்னி தம் அரசியல் தொடர்புகளை என்றும் பயன்படுத்திக் கொண்டதில்லை என்பதை வலியுறுத்தினார்.